உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வங்கதேசத்தில் இயல்பு நிலை திரும்புகிறது ஜவுளித்துறையினரே... கவலை வேண்டாம்

வங்கதேசத்தில் இயல்பு நிலை திரும்புகிறது ஜவுளித்துறையினரே... கவலை வேண்டாம்

கோவை;'வங்கதேசத்தில் இயல்பு நிலை திரும்பி வரும் சூழலில், ஜவுளித்தொழிற்சாலைகள் இயங்கத் துவங்கிவிட்டதால் நம் நாட்டு, வர்த்தகர்களும், தொழில்துறையினரும் கவலை அடைய வேண்டாம்' என்று, ஜவுளித்துறையினர் கூறுகின்றனர். நம் அண்டை நாடான வங்கதேசம், ஜவுளி ஏற்றுமதிக்கு போட்டி நாடாக இருந்தாலும், நட்பு நாடு என்ற அந்தஸ்தில் உள்ளது. ஆயத்த ஆடை ஏற்றுமதியில், சீனாவுக்கு அடுத்து வங்கதேசம், மாதம், ரூ.30,000 கோடிக்கு ஏற்றுமதி செய்கிறது.நம் நாட்டிலிருந்து மட்டும் மாதந்தோறும், ரூ.12,000 கோடி வரை, ஆயத்த ஆடை ஏற்றுமதி செய்யப்படுகிறது. நம் நாட்டில், ஸ்திரமான ஜவுளி உற்பத்தி கட்டமைப்பு இருப்பதால், மாதந்தோறும் 2,500 கோடி ரூபாய் வரை, ஏற்றுமதியை அதிகரிக்க முடியும். வங்கதேசத்தில் இயல்பு நிலை திரும்பி வரும் சூழலில், நம் நாட்டு வர்த்தகர்களும், தொழில்துறையினரும் கவலை அடைய வேண்டாம் என்கின்றனர் ஜவுளித்துறையினர். இது குறித்து, அகில இந்திய ஜவுளி சம்மேளன கூட்டமைப்பு (சிட்டி) பருத்தி அபிவிருத்தி கழக தலைவர் ராஜ்குமார் கூறியதாவது:ஒட்டுமொத்த ஜவுளித்துறையில், நல்ல உறுதியான கட்டமைப்பை கொண்டுள்ளது வங்கதேசம். அந்நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யும் ஜவுளிப்பொருட்களில், ஆயத்த ஆடை மட்டும், 85 சதவீதமாகும்.உள்நாட்டு குழப்பம் என்பது அரசியல் ரீதியானது. அந்நாட்டின் முக்கிய வருவாயில் ஜவுளித்துறையே பிரதானமானது. அதனால் புதியதாக பொறுப்பேற்ற அரசு, விரைவாக இயல்பு நிலைக்கு கொண்டு வந்து விட்டது. தொழிற்சாலைகளில் உற்பத்தியும் துவங்கி விட்டது.ஜவுளித்துறையே அந்நாட்டின் பிரதான வருவாய். அதனால், ஒரு சில நாட்களில் வேகம் பெறும். அதன் பின் வழக்கமான சூழல் ஏற்படும். அதனால் நம் ஜவுளித்துறைக்கு பெரிய பாதிப்பு ஏற்படாது.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி