உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தொழிலாளர் நலச்சட்டத்தை மீறிய 231 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

தொழிலாளர் நலச்சட்டத்தை மீறிய 231 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

பொள்ளாச்சி;கோவை மாவட்டத்தில், தொழிலாளர் நலத்துறையில் பதிவு செய்யாதது உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர் நலச்சட்டங்களை மீறிய குற்றங்களுக்காக, 231 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.கோவை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தலைமையில், அனைத்து தொழிலாளர் துணை ஆய்வர்கள் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வர்கள் இணைந்து, தொழிலாளர் நலச்சட்டத்தின் கீழ் கடந்த மாதம் கூட்டாய்வு செய்தனர்.சட்ட முறை எடையளவு சட்டத்தின் கீழ் ஆய்வு செய்தபோது, எடை குறைவு, முத்திரை, மறுமுத்திரையிடாத எடை அளவுகள் வைத்திருத்தல், தரப்படுத்தப்படாத எடையளவுகள், மறுபரிசீலனை சான்று காட்டி வைக்கப்படாமை, சோதனை எடைக்கற்கள் வைத்திருக்காதது தொடர்பாக, 37 முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.மேலும், பொட்டலம் இடுவதற்கான பதிவு சான்று பெறாதது, உரிய அறிவிப்பு இல்லாதது, அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தல், தரப்படுத்தப்படாத அலகில் எடைகள் மற்றும் அளவுகளில் அறிவிப்பு விலைப்பட்டியல் தொடர்பாக, ஆறு முரண்பாடுகள் கண்டறியப்பட்டு, 43 உரிமையாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.எடை அளவுகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முத்திரை இடாமல் பயன்படுத்தும் வணிகர்களுக்கு குறைந்தபட்சம் ஐந்தாயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம், 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். எனவே, எடைகள் மற்றும் அளவைகள் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பழுதுபார்ப்பவர்கள், அரசிடம் இருந்து உரிய உரிமம் பெற்று, உரிய காலத்துக்குள் புதுப்பிக்க வேண்டும்.தொழிலாளர் நலத்துறையில் பதிவு செய்யாதது உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர் நலச்சட்டங்களை மீறிய குற்றங்களுக்காக, கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட, 231 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.அனைத்து பள்ளி, கல்லுாரி, தனியார் போக்குவரத்து நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் சட்டத்தின் கீழ் பதிவுச் சான்று பெற வேண்டும். இரு ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். பதிவு பெறாதது; விதிமுறை மீறிய நான்கு நிறுவனங்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.ஒப்பந்த தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்கள், தொழிலாளர் நலத்துறையில் பதிவு சான்று பெற வேண்டும். அச்சான்று அடிப்படையில் உரிமம் பெற வேண்டும். இரு ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். கடைகள் மற்றும் நிறுவனங்களில் குறைந்தபட்ச கூலி வழங்க வேண்டும்.அவ்வாறு வழங்காத இரு நிறுவனங்ளில் முரண்பாடு கண்டறியப்பட்டு, 44,426 ரூபாய் குறைந்தபட்ச கூலி நிலுவை தொகை சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு வழங்கக்கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அனைத்து தொழிலாளர்களின் ஊதியத்தை வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என, தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை