சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற கடைகளுக்கு நோட்டீஸ்
பொள்ளாச்சி;பொள்ளாச்சியில், சாலையோர ஆக்கிரமிப்புகளை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இன்று அகற்ற உள்ளனர். இதற்காக, கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.பொள்ளாச்சி பகுதியில் சாலையோரங்களை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென தனி நபர் ஒருவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.உயர்நீதிமன்ற உத்தரவின்படி, ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள வேண்டுமென, நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையோரம் ஆக்கிரமித்துள்ள கடைக்காரர்களுக்கு, கடந்த, இரண்டு நாட்களாக நோட்டீஸ் வழங்கப்படுகிறது.நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு, மீன்கரை ரோடு, பல்லடம் ரோடுகளில் உள் சாலையோர தற்காலிக ஆக்கிரமிப்புகளை, ஆக்கிரமிப்பாளர்களே அகற்றிக்கொள்ள வேண்டும் என, கால அவகாசம் வழங்கப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது.ஆக்கிரமிப்புகளை குறித்த நேரத்தில் அகற்றிக்கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் நெடுஞ்சாலைத்துறை வாயிலாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். கோர்ட் உத்தரவுப்படி நாளை (இன்று) ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளது.இவ்வாறு, கூறினர்.