| ADDED : மே 23, 2024 11:10 PM
அன்னுார்:அன்னுாரில் பூட்டிய வீட்டில் இருந்து, ஓடிசா இளைஞரின் உடல் அழுகிய நிலையில் போலீசாரால் மீட்கப்பட்டது. இந்த வழக்கில் இறந்த இளைஞரின் உறவினர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார்.ஓடிசா மாநிலம் மயூர் பாஞ்ச் பகுதியை சேர்ந்தவர் ரதிகண்டா பிகாரா, 23, இவர் கணேசபுரம் அருகே குறுக்கம்பாளையம் பகுதியில் வீடு ஒன்று வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார். அருகில் உள்ள தனியார் மில் ஒன்றில் கூலி வேலை பார்த்தார். இவரது உடல் அழுகிய நிலையில், இவர் தங்கியிருந்த வீட்டில் இருந்து போலீசாரால் கடந்த 21ம் தேதி இரவு மீட்கப்பட்டது. பின், ஓடிசாவில் உள்ள ரதிகண்டா பிகாராவின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து அன்னுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்த நிலையில், இறந்த நபர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும், போலீசார் விசாரணையில், கொலை செய்தது, இறந்து போன ரதிகண்டா பிகாராவின் உறவினரான பிரபாகர் பிகாரா, 23, என தெரியவந்தது. இதையடுத்து அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், ரதிகண்டா பிகாராவின் மாமாவின் மகன் தான் பிரபாகர் பிகாரா. இவர்கள் இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டில் மது அருந்தினர். அப்போது ரதிகண்டா பிகாரா, பிரபாகர் பிகாராவின் பெற்றோர் குறித்து தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் கொண்ட பிரபாகர் பிகாரா வீட்டில் இருந்த உடற்பயிற்சி செய்ய பயன்படுத்தப்படும் தம்புல்ஸ் இரும்பை கொண்டு தலையில் தாக்கினார். இதில் ரதிகண்டா பிகாரா உயிரிழந்தார். உடனே அவரை படுக்க வைத்துவிட்டு, வீட்டை வெளிபக்கமாக பூட்டிவிட்டு பிரபாகர் பிகாரா வெளியே சென்றுவிட்டார். அவரை நேற்று கைது செய்தோம், என்றனர்.-----