பொள்ளாச்சி:பி.ஏ.பி., தொகுப்பு அணைகளின் நீர்மட்டம் வெகுவாக சரிந்து வருகிறது. அணையில் இருக்கும் நீர் இருப்பை கொண்டு, கோடையை சமாளிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.பி.ஏ.பி., திட்டத்தில், மேல்நீராறு, கீழ்நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம், துாணக்கடவு, ஆழியாறு, திருமூர்த்தி உள்ளிட்ட அணைகள் உள்ளன. கேரளாவுடன் ஒப்பந்த அடிப்படையில் இந்த அணைகள் கட்டப்பட்டு, பாசனம் மற்றும் குடிநீர் பயன்பாட்டுக்காக நீர் பங்கீட்டு செய்யப்படுகிறது.ஆண்டுதோறும் போதிய பருவமழை கிடைத்து வந்த சூழலில், அணைகளின் நீர்மட்டமும் குறையாமல் இருந்ததால் நீர் வினியோகம் முறையாக இருந்தது.இந்நிலையில் கடந்தாண்டு பருவமழை பொய்த்ததால் அணை நீர்மட்டம் வெகுவாக சரிந்தது. மேலும், பாசனத்துக்கு தொடர் தண்ணீர் திறப்பு போன்ற காரணங்களினால், அணைகள் நீர்மட்டம் சரிந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.சோலையாறு அணை மொத்தம் உள்ள, 160 அடியில், 4.94 அடியாகவும், பரம்பிக்குளம் அணை மொத்தம் உள்ள, 72 அடியில், 10.15 அடியாகவும் உள்ளது. ஆழியாறு அணை மொத்தம் உள்ள, 120 அடியில், 66 அடி நீர்மட்டம் உள்ளது. குடிநீருக்கு 'ஓகே'
அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்ததால், இந்தாண்டு பாசனத்துக்கு தண்ணீர் வினியோகம் செய்ய முடியாத நிலையில், பயிர்களை காப்பாற்ற மட்டுமே குறைந்தளவு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. தற்போது, பாசனத்துக்குரிய தண்ணீர் வினியோகம் நிறைவடைந்து, நீர் இருப்பு வைத்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஆழியாறு அணையில் குடிநீர் தேவைக்காக நீர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. போதியளவு நீர் உள்ளதால் தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்து கோடையை சமாளிக்க முடியும்,' என்றனர். மழையால் நம்பிக்கை
ஆழியாறு அணைப்பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு திடீரென அரை மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்தது. கடும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொள்ளும் வகையில், பெய்த மழையால் விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.ஆழியாறு அணை பகுதியில், 42.6 மி.மீ., வால்பாறையில், 9, கீழ் நீராறு, 10 மி.மீ., என்ற அளவில் மழையவு பதிவானது. இதுபோன்று மழை பெய்து, காய்ந்த மரங்களை காப்பாற்றவும், வறட்சி நீங்க வேண்டும் என்ற நம்பிக்கையில், விவசாயிகள் காத்திருக்கின்றனர்.