விட்டாச்சு லீவு... என்று பள்ளி குழந்தைகள் விடுமுறையை கொண்டாடி வருகின்றனர். சில வாரங்களுக்கு புத்தக சுமையிலிருந்து விடுதலை. சில பள்ளிகளில் குறிப்பிட்ட நாள், குழந்தைகளை பெற்றோருடன் வரச்சொல்லி, எவ்வாறு படிக்கின்றனர், எவ்வாறு படிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் பெற்றோருக்கு அறிவுறுத்துகின்றனர். பெற்றோர் பலர் சொல்லும் குற்றச்சாட்டு, தங்கள் குழந்தை, வீட்டில் மொபைல் போனில் தான் அதிக நேரம் விளையாட்டு என்று.உனக்கு எதுக்கு மொபைல் போனில் விளையாட்டு என்று, ஆசிரியரும் மென்மையாக கண்டிக்கிறார். பெற்றோர், தங்கள் குழந்தைகள் மீது சொல்லும் பொதுவான குற்றச்சாட்டு, கடந்த பல ஆண்டுகளாகவே தொடர்ந்து வருகிறது. நீண்ட நேரம் மொபைல் பார்த்துக் கொண்டிருந்தால், ஒரு கட்டத்தில் மொபைல் போன் வாங்கி வைத்து விடுகிறீர்கள் சரி... அதற்கு பின்... இதிலிருந்து குழந்தைகளை விடுவிக்க என்ன மாதிரியான மாற்று நடவடிக்கை, பெற்றோர் எடுத்தனர் என்ற கேள்வி இருக்கிறதே.அதற்கும் பெற்றோர் தானே பதில் சொல்லியாக வேண்டும். மாறுதல் என்பது வீட்டிலிருந்து தான் துவங்க வேண்டும். அதற்கு என்ன செய்யலாம்... சில யோசனைகள்.முதலில், பெற்றோராகிய நீங்கள், மொபைல் போனில் மூழ்கியிருக்காதவாறு நடந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், உங்களை பார்த்து தான், குழந்தைகளும் கற்றுக் கொள்வர்.இன்றைய கால கட்டத்தில் நுாலகத்தை பலர் சரியாக பயன்படுத்துவதில்லை. பள்ளியிலும் படிப்பு... இங்கும் படிப்பா... என்று ஆரம்பத்தில் சலித்துக் கொள்வார்கள். மொபைல் போனில் பழக்கப்பட்டவர்கள், இதற்கு பழக்கப்பட மாட்டார்களா...நுாலகங்களுக்கு அழைத்து செல்லுங்கள். அங்கு உறுப்பினர் சேர்க்கை என துவங்கி, வாசிப்பின் அவசியத்தை உணர்த்துங்கள். புத்தகங்களை எடுத்து வந்து வீட்டில் படிக்க கொடுங்கள். ஒரே நாளில் இது நடந்து விடாது. சற்று நாள் பிடிக்கும். பின், அதுவே பிடித்து போகும். தபால் நிலையம் அல்லது வங்கிக்கு குழந்தைகளை அழைத்து சென்று, விண்ணப்பத்தை எவ்வாறு பூர்த்தி செய்வது என்று கற்றுக் கொடுங்கள்.இன்று தனிக்குடித்தனம் பெருகி விட்டது. வீட்டில் தாத்தா, பாட்டி இருப்பதே அரிது. அப்படி இருக்கும் பட்சத்தில், தாத்தா, பாட்டி வீட்டுக்கு அழைத்து செல்லுங்கள். பெரியவர்களிடம் எப்படி மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும், அவர்களை எப்படி மதிக்க வேண்டும் என்று நீங்கள் சொல்லிக் கொடுத்திருந்தாலும், தாத்தா, பாட்டி சொல்லிக் கொடுக்கும் விதமே அலாதி. தவிர, அவர்களுடன் இருக்கும் நெருக்கத்தை இது அதிகப்படுத்தும்.விடுமுறை தானே... காலையில் சற்று நேரம் கழித்து படுக்கையில் இருந்து எழட்டும் என்று விட்டு விட வேண்டாம். இரவு, வழக்கமாக துாங்க செல்லும் நேரத்துக்கு முன்பாகவே, துாங்க வைக்க வேண்டும். அப்போது தான், அதிகாலையில் எழுந்திருப்பர். அதிகாலை வெயில் உடலில் படட்டும். அது, ஆரோக்கியத்துக்கு நல்லது.மாலையில், நண்பர்களுடன் விளையாட விடுங்கள். நீ தான் விளையாட்டில், படிப்பில் முதலிடம் வகிக்க வேண்டும் என்று குழந்தையை கட்டாயப்படுத்தாதீர்கள். வெற்றியை போல் தோல்வியும் இருக்கும் என்று, விளையாட்டு அருமையாக கற்றுத் தரும். மேலும், விட்டுக்கொடுக்கும் மனோபாவமும் கொண்டிருக்க வேண்டும் என்று, குழந்தைகளை விளையாட்டு மேன்மைப்படுத்தும். இதற்காக, குழந்தைகளை பெற்றோர் தயார்படுத்த வேண்டும்.குழந்தைகளுடன் மனம் விட்டு பேசுங்கள். அவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்று முதலில் கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள். அப்போது சில திறமைகள் வெளிப்படும். அதன் வழியே பயணிக்க, கை கொடுங்கள்.பொதுவாக சொல்லப் போனால், பெற்றோர் தங்கள் நேரத்தை குழந்தைகளோடு செலவிட முடியாமல், இருக்கும் குற்ற உணர்ச்சியை சமரசம் செய்வதற்காக, அவர்கள் கையில் கொடுக்கப்படும் லஞ்சம் தானே மொபைல் போன், சாக்லேட் உட்பட பிற அம்சங்கள். மாற்றம் எல்லாவற்றையும் மாற்றும்.