விளையாட்டு உபகரணங்கள் வீணாவதால் மக்கள் அதிருப்தி
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சூலக்கல் பகுதியில் கோவில் எதிரே உள்ள விளையாட்டு உபகரணங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.கிணத்துக்கடவு, சூலக்கல் ஊராட்சி மாரியம்மன் கோவில் எதிரே உள்ள விளையாட்டு திடலில், குழந்தைகள் விளையாடும் உபகரணங்கள் துருப்பிடித்தும், உபயோகப்படுத்த முடியாத நிலையிலும் உள்ளன.ஊஞ்சலில் வெறும் கம்பங்கள் மட்டுமே உள்ளது. குழந்தைகள் சறுக்கி விளையாடும் உபகரணதில், உரிய பாதுகாப்பு இல்லாமல் இருப்பதால் குழந்தைகள் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.இந்த விளையாட்டு திடல் அருகே, மேல்நிலை தண்ணீர் தொட்டி உள்ளது. இதன் அருகாமையில் அதிக அளவு குப்பை கொட்டப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. பொது சுகாதாரம் பாதிக்கப்படுகிறது.இந்த இடம், கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் 'பார்க்கிங்' செய்யும் பகுதியாக மாறி வருகிறது. இதை சரி செய்ய, ஊராட்சி நிர்வாகம் சார்பில் குழந்தைகள் விளையாட இந்த விளையாட்டு திடலை மேம்படுத்த வேண்டும்.குப்பை கொட்டாமல் இருக்க குப்பை தொட்டி அமைக்க வேண்டும். இப்பகுதியில் வாகனங்கள் நிறுத்த தனி இடம் ஒதுக்க வேண்டும். விளையாட்டு திடலுக்கு வேலி அமைத்து பாதுகாக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.