பட்டப்பகலில் வாகன திருட்டு; அதிகரிப்பதால் மக்கள் அச்சம்
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு மற்றும் நெகமம் பகுதியில், கடந்த சில நாட்களாக பைக் திருடு போவது அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் இரவு நேரங்களில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த பைக்குகள் மட்டும் திருடப்பட்டது.தற்போது, பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களான, பேங்க், வணிக வளாகம், கடை தெரு போன்ற பகுதிகளில் நிறுத்தப்பட்டிருக்கும் பைக்குகள் திருடப்படுகிறது.இதுமட்டுமின்றி, தற்போது தோட்டத்தில் தனியாக இருக்கும் வீடு மற்றும் கோவில் போன்ற இடங்களிலும் பைக்குகள் திருடப்படுகிறது.இதில், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட ஒரு சில இடங்களில் திருடப்பட்ட பைக்குகள், போலீசாரால் எளிதாக கண்டுபிடிக்கப்படுகிறது. கண்காணிப்பு கேமரா இல்லாத பகுதியில் பைக் திருடு போனால் அதை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.இதை தவிர்க்க, முக்கிய ரோடு மற்றும் கடை தெருக்களில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். இவை அவ்வப்போது வேலை செய்கிறதா என்பதை, போலீசார் கண்காணிக்க வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.மக்கள் கூறுகையில், 'பைக் திருடு போவதை கேமராக்கள் வாயிலாக கண்டறியலாம். ஆனால், கேமரா காட்சிகளில் திருடுபவர் முகம் சரியாக தெரிவதில்லை. எனவே, தற்போது உள்ள புதிய தொழில்நுட்ப கேமராக்களை முக்கிய இடங்களில் பொருத்தி கண்காணிக்க வேண்டும்,' என்றனர்.