100 சவரன் திருடிய நபர்கள்: கால் முறிவுடன் பிடிபட்டனர்
கோவில்பாளையம்: வீடு புகுந்து 100 சவரன் கொள்ளையடித்த மத்திய பிரதேச குற்றவாளிகள் பிடிபட்டனர். அதில் இருவர் தப்பிக்க முயன்ற போது கால் எலும்பு முறிவு ஏற்பட்டது.சரவணம்பட்டி அருகே வழியாம் பாளையம் பிரிவில் பாலசுப்ரமணியன், 56. குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஐ.டி., நிறுவன ஊழியர்.கடந்தாண்டு அக். 30ம் தேதி பொள்ளாச்சியில் உள்ள பெற்றோரை பார்க்க குடும்பத்துடன் சென்றார் . நவ. 1ம் தேதி வந்து பார்த்தபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்து 100 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.இதுகுறித்து கோவை ரூரல் போலீஸ் எஸ்.பி., கார்த்திகேயன் உத்தரவின் பேரில், தனி படைகள் அமைக்கப்பட்டன.'சிசி டிவி' காட்சிகள் மற்றும் சைபர் பிரிவு போலீசார் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஹிம்மத்சிங், 30. ராகுல் சோனி, 34. யாஷ் சோனி, 26. சுனில் கமல் சிங், 30. முகேஷ் கியான்சிங், 29. ஆகிய ஐந்து பேரும் வீடு புகுந்து திருடியது தெரிய வந்தது.அவர்கள் கீரணத்தத்தில் தலைமறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களை போலீசார் பிடிக்க முயன்ற போது இரண்டாவது மாடியில் இருந்து எட்டி குதித்த சுனில் மற்றும் முகேஷின் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.இதையடுத்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். மற்ற மூவரும் அன்னூர் கோர்ட்டில் ஆஜப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.இதுகுறித்து ரூரல் எஸ்.பி., அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'குற்றங்களை தடுக்க பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. தயங்காமல் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981 81212 ஐ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்,' என்று கூறப்பட்டுள்ளது.