அரசு மருத்துவமனையில் போலீசார் ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளது: டீன்
கோவை:கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில், போலீஸ் ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளதாக, டீன் நிர்மலா தெரிவித்தார்,நிருபர்களிடம் அவர் கூறியதாவது:அரசு மருத்துவமனை வளாகத்தில் கடந்த, 14ம் தேதி பயிற்சி டாக்டரிடம் அத்துமீற முயன்ற நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயிற்சி மருத்துவர்கள் கழிப்பிடம், அடிப்படை வசதிகள் கேட்டு கோரிக்கை வைத்தனர். அதை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மருத்துவமனை வளாகத்தில், 250 சி.சி.டி.வி.,கேமராக்கள் உள்ளன. வேலை செய்யாத கேமராக்களை சரி செய்யும் பணி, நடைபெற்று வருகிறது.விளக்குகள் வசதியும், முழுமையாக சரிசெய்யப்பட்டுள்ளது. கழிப்பிட வசதி இல்லை என்று தவறான செய்தி பரப்பி வருகின்றனர். 5, 6 இடங்களில் கழிப்பிடம் தயார் செய்யப்பட்டுள்ளது. பழைய கட்டடம் என்பதால், இங்கு ஒரு சில குறைபாடுகள் உள்ளன. அதை சரி செய்து வருகிறோம். மருத்துவமனை வளாகத்தில் சாலை, பாதாள சாக்கடை இணைப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இந்த பணிகள் முடிந்தால், விரைவில் தீர்வு கிடைக்கும். வாகனங்களை மருத்துவமனை வளாகத்தில் நிறுத்துவதால், நெருக்கடி ஏற்பட்டுள்ளது.அதை தவிர்க்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது. நோயாளிகளை பார்வையிட, 4:00 முதல், 6:00 மணி வரை தான் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. நோயாளிகள் உடன், 2 பேர் தான் தங்கியிருக்க வேண்டும். மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய, போலீஸ் கமிஷனரிடம் கோரிக்கை வைத்தோம். இதனால், போலீசார் ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, டீன் நிர்மலா தெரிவித்தார்.