ஜனாதிபதி விருது பெற்ற இன்ஸ்பெக்டர் மறைவு
கோவை:கோவை மாவட்ட கியூ பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சந்திரமோகன்,48, உடல் நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார். இவருக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். காவல்துறையில் நேர்மையான, துணிச்சலான அதிகாரிகளில் ஒருவராக திகழ்ந்த இவர், 2016ம் ஆண்டு கருமத்தம்பட்டி, கரூர், நாமக்கல் பகுதிகளில் மாவோயிஸ்டுகளை கைது செய்து, உயரதிகாரிகளின் பாராட்டைப் பெற்றார்.சந்தன கடத்தல் வீரப்பனை பிடித்த, போலீஸ் குழுவில் இருந்து இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றார். தொடர்ந்து, கோவை கியூ பிரிவில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். சிறப்பாக பணியாற்றியதற்காக, ஜனாதிபதி விருது பெற்றுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக, மதுரை அப்பல்லோ மருத்துவமனையில், உடல்நலக்குறைவுக்கு சிகிச்சை பெற்று வந்த சந்திரமோகன், நேற்று உயிரிழந்தார். கோவை புலியகுளம் பகுதியில் உள்ள அவரது வீட்டில், இறுதிச்சடங்கு நடந்தது. போலீஸ் உயர் அதிகாரிகள், போலீசார் பலர் அஞ்சலி செலுத்தினர். பின், நஞ்சுண்டாபுரம் ஈஷா மின் மயானத்தில், அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.