| ADDED : ஆக 16, 2024 01:57 AM
கோவை:கோவை அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு, பெண் டாக்டர் ஒருவர் வீட்டிற்கு செல்வதற்காக பார்க்கிங்கில் நிறுத்தி இருந்த தன் இருசக்கர வாகனத்தை எடுக்க செனறார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், திடீரென தன் ஆடைகளைக் கலைந்து பெண் டாக்டரை நோக்கி சென்றார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போடவே, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் ஓடிச்சென்று, அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அந்த நபர் மத்திய பிரேதசத்தைச் சேர்ந்த மயனக் கலார், 24, என தெரிந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.இதற்கிடையே, நேற்று காலை பயிற்சி டாக்டர்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் திடீரென டீன் அலுவலகம் முன் கூடி, தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பணியின்போது தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். பயிற்சி டாக்டர்கள் பெண்கள், 80 பேர், ஆண்கள், 70 பேர் உள்ளனர். ஆனால், போதிய கழிப்பறை வசதிகள் இல்லை. இதனால் பல சிரமங்களை சந்திக்க வேண்டி உள்ளது. இரவு நேரத்தில் மின் விளக்குகள் எரிவதில்லை. 'சிசிடிவி' கேமரா வேலை செய்வதில்லை எனக்கூறி, இரண்டு மணி நேரத்திற்கு மேல் பயிற்சி டாக்டர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.தகவலறிந்து வந்த டீன் நிர்மலா, டாக்டர்களிடம் பேச்சு நடத்தினார். கழிப்பிட வசதிகள், மின் விளக்குகள் மற்றும் கேமராக்கள் சரிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி அளித்தார். தொடர்ந்து, பயிற்சி டாக்டர்கள் கலைந்தனர்.