| ADDED : ஜூன் 11, 2024 11:25 PM
மேட்டுப்பாளையம்:காரமடை ரயில்வே சுரங்க பாதையில் மழைநீர் அகற்றப்பட்டு, மேற்கொண்டு மழைநீர் தேங்காதவாறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.கோவை மாவட்டம் காரமடையில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்திற்கு கீழ் இருசக்கர வாகனங்கள் மற்றும் மேம்பாலத்திற்கு அருகே உள்ள ராமசாமி சந்து, அண்ணா நகர், உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் வசித்து வரும் மக்கள் நடந்து செல்ல சுரங்க பாதை அமைக்கப்பட்டது.மக்கள் பயன்பாட்டில் இருந்த சுரங்க பாதையில், மழை தண்ணீர் பல மாதங்களாக தேங்கி நின்றது. அதை காரமடை நகராட்சி நிர்வாகம் அதிக திறன் கொண்ட மோட்டார்கள் வாயிலாக பல முறை அகற்றினார்கள்.ஆனால் மீண்டும் சுரங்க பாதையில் தண்ணீர் தேங்கி நின்றது. இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகிகள் ஆய்வு மேற்கொண்ட போது, தண்ணீர் ஊற்று எடுத்து வந்தது என கண்டறியப்பட்டது. மீண்டும் தண்ணீர் மோட்டார் வாயிலாக வெளியற்றப்பட்டது. அதன் பின் தண்ணீர் தேங்காமல் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, தற்போது நெடுஞ்சாலைத்துறையினர் சுரங்க பாதையில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ரயில்வே சுரங்க பாதையில் தண்ணீர் எதனால் வருகிறது என கண்டறியப்பட்டு, தண்ணீர் வெளியேற்றப்பட்டது. பின் தரையில் மீண்டும் கான்கிரீட் போடப்பட்டு, சுற்று சுவர் பலப்படுத்தப்பட்டு வருகிறது.மேலும் மழை காலங்களில் தண்ணீர் வெளியே செல்ல ஏற்றவாறு சீரமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது,' என்றார்.