பெ.நா.பாளையம்;சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்டு, திறப்பு விழா கண்ட பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலத்தின் மீது மழை தண்ணீர் தேங்கி நின்றதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில், பெரியநாயக்கன்பாளையத்தில் காலை, மாலை ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க, பெரியநாயக்கன்பாளையத்தில் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா முதல் ஜோதிபுரம் வரை, 1.6 கி.மீ., தூரத்திற்கு, 115 கோடி ரூபாய் செலவில், மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது. திறப்பு விழா சமீபத்தில் நடந்தது.நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால், மேம்பாலத்தில் ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் நேற்று காலை நேரத்தில் ஜோதிபுரம், வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோவை நோக்கி இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருபவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். குறிப்பிட்ட இடத்தில் மேம்பாலத்தின் பெரும் பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றதால், இரு சக்கர வாகன ஓட்டிகள், பாலத்தின் ஓரத்தில் வாகனங்களை இயக்கி சென்றனர்.இது குறித்து கோயம்புத்தூர் மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்க செயலாளர் தேவேந்திரன் கூறுகையில், ''ஜோதிபுரத்தில் மேம்பால சாலையும், அணுகு சாலையும் இணையும் இடத்தில் சாலையின் அகலம் மிகவும் குறைவாக உள்ளது. இதனால் விபத்துக்கள் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும், மேம்பால பகுதியில் விளக்குகள், சாலை பாதுகாப்பு குறியீடுகள் இல்லாமல் வாகனங்கள் இரவு நேரங்களில் ஆபத்தான நிலையில் சென்று வருகின்றன. மழைநீர் செல்ல போதிய வடிகால் வசதி அமைக்கப்படாமல் இருந்ததால், நேற்று முன்தினம் பெய்த மழையால் தண்ணீர் மேம்பாலத்தின் மீது குளம் போல் தேங்கி நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னைக்கு தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் மேம்பால பாதுகாப்பு அலுவலர் மகேஸ்வரன் கூறுகையில், ''மேம்பாலத்தின் ஓரத்தில் மழை நீர் வடிந்து செல்ல துளைகள் அமைக்கப்பட்டுள்ளன. பாட்டில், குப்பை உள்ளிட்டவைகள் துளையில் அடைபட்டு கிடந்ததால், மழைநீர் செல்ல வழி இல்லாமல் இருந்தது. அவை அகற்றப்பட்டதால் பாலத்தின் மேல் பகுதியில் இருந்த தண்ணீர் அகன்றது'' என்றார்.