கோவை;ராமநாதபுரம் அருகே கொங்கு நகரில் ரூ.10 கோடி மதிப்பிலான, 39 சென்ட் பொது ஒதுக்கீட்டு இடத்தை, மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் நேற்று மீட்டனர்.மாநகராட்சி மத்திய மண்டலம், 62வது வார்டு ராமநாதரபுரம் அருகே கொங்கு நகர் உள்ளது. இங்கு கடந்த, 1972ம் ஆண்டு கோவை நகராட்சியாக இருந்தபோது, கூட்டுறவு வீடு கட்டும் சங்கம் ஒன்றுக்கு, 8.49 ஏக்கர் இடத்தில், 84 மனைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.பொது பயன்பாட்டிற்கென, 70 சென்ட் மற்றும், 14 சென்ட் இடம் இரண்டு இடங்களில் ஒதுக்கப்பட்டிருந்தது. நாளடைவில் அவை தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு சில இடங்களில் திறந்த வெளியாகவும், சில இடங்களில் கட்டடங்களாகவும் காணப்படுகிறது.மேலும், ஒப்புதல் வரைபடத்தில் உள்ள, 30 அடி மற்றும் 40 அடி ரோடும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பை மீட்டு, பொது பயன்பாட்டுக்கு கொண்டுவருமாறு மாநகராட்சி அதிகாரிகளிடம், பல்வேறு தரப்பினரும் மனு அளித்திருந்தனர். ஆக்கிரமிப்பு மீட்பு
இந்நிலையில், மத்திய மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் கோவிந்த பிரபாகர் தலைமையிலான அலுவலர்கள், நேற்று ஆக்கிரமிப்பை மீட்டனர். 14 சென்ட் பொது ஒதுக்கீட்டு இடத்துக்கான கேட்டை பூட்டி, 'சீல்' வைத்தனர்.மற்றொரு பகுதியில் இருக்கும், 70 சென்ட் பொது ஒதுக்கீட்டு இடத்தில் காலியாக இருந்த, 25 சென்ட் இடத்தை மீட்டு, அந்த இடத்தில் மாநகராட்சி அறிவிப்பு பலகை வைத்தனர். மீதமுள்ள ஆக்கிரமிப்பு இடத்தை மீட்க, மாநகராட்சி சார்பில் 'நோட்டீஸ்' வழங்கப்படவுள்ளது.தற்போது ரூ.10 கோடி மதிப்பிலான, 39 சென்ட் பொது ஒதுக்கீட்டு இடத்தை மீட்டுள்ளோம். மீதமுள்ள இடமும் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களுக்கு, நோட்டீஸ் வழங்கி மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.- குமார்மாநகராட்சி நகரமைப்பு அலுவலர்.