உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மழைத்துளிக்கு ஏங்கும் செந்நிறக்காடுகள் பச்சை நிறமே... பச்சை நிறமே... * மழைத்துளிக்கு ஏங்கும் செந்நிறக்காடுகள் * வறட்சியின் பிடியில் மேட்டுப்பாளையம் வனம்

மழைத்துளிக்கு ஏங்கும் செந்நிறக்காடுகள் பச்சை நிறமே... பச்சை நிறமே... * மழைத்துளிக்கு ஏங்கும் செந்நிறக்காடுகள் * வறட்சியின் பிடியில் மேட்டுப்பாளையம் வனம்

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் மரங்கள் வேகமாக காய்ந்து வருகின்றன. பசுமையை இழந்து, செந்நிறமாக வனப்பகுதி காட்சியளிக்கிறது.மேட்டுப்பாளையம் வனச்சரகம், 23,500 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. குன்னுார், கோத்தகிரி மலைகள் உட்பட மரங்கள் நிறைந்த அடர்ந்த வனப்பகுதிகள், இந்த வனச்சரகத்தில் உள்ளன. இங்கு புலி, யானை, சிறுத்தை, காட்டெருமை, மான், கரடி என, பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன.மலைப்பகுதியில் உள்ள நீரோடைகளில் வரும் தண்ணீர், குட்டைகளில் தேங்கியுள்ள மழை நீர் போன்றவை வனப்பகுதியில் உள்ள மரம் மற்றும் வனவிலங்குகளின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. தற்போது வெயிலால் வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது.

காய்ந்த மரங்கள்

வனப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மரங்கள், தண்ணீர் இன்றி வேகமாக காய்ந்து வருகின்றன. எப்போதும் பசுமையாக காட்சியளிக்கும் வனப்பகுதி, தற்போது அதன் பசுமையை இழந்து, காய்ந்த புற்கள், மரங்கள் என செந்நிறமாக காட்சியளிக்கின்றன. இந்த கடும் வறட்சியால் வனவிலங்குகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. தண்ணீரை தேடி ஊருக்குள் வரும் நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு வரும் வனவிலங்குகளை தடுக்க, தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய, மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் 18 தண்ணீர் தொட்டிகள், 20க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பணைகள் உள்ளன. தடுப்பணைகள், குட்டைகளில் தண்ணீர் வறண்டுள்ளது.

வனத்தீ அபாயம்

வனப்பகுதியில் நிலவும் இந்த கடும் வறட்சியால், தீ விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதை தடுக்க தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு, வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.எனினும், அடர்ந்த வனப்பகுதிகளில், காய்ந்து வரும் மரங்களால், காட்டுத்தீ பரவ வாய்ப்புள்ளது. மழையை பெரிதும் எதிர்பார்த்து, வனத்துறையினர் காத்திருக்கின்றனர்.தீவிர கண்காணிப்புமேட்டுப்பாளையம் வனப்பகுதியில் 50 கி.மீ., துாரம் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள ஊட்டி சாலை, மற்றும் கோத்தகிரி சாலையில் சுற்றுலா பயணியரை தீவிரமாக கண்காணித்து வருகின்றோம். வனப்பகுதிகளில் தீ விபத்து ஏற்படாமல் இருக்க, இரு குழுக்கள் அமைக்கப்பட்டு, சுழற்சி முறையில், 24 மணி நேரமும் ரோந்து மேற்கொண்டு வருகிறோம். - ஜோசப் ஸ்டாலின்,வனச்சரகர், மேட்டுப்பாளையம்

சாலையில் அலையும் குரங்குகள்

தண்ணீரை தேடி குரங்குகள் சாலையில், அங்கும் இங்கும் அலைகின்றன. அவ்வழியாக செல்வோர் குரங்குகளின் பரிதாப நிலையை பார்த்து தண்ணீர் கொடுத்து உதவுகின்றனர்.வனத்துறையினர் கூறுகையில், 'குரங்குகளுக்கு வனப்பகுதியில் இயற்கையாகவே உணவு உள்ளது. சாலையோரங்களில் உணவுப் பொருட்களை வீசக்கூடாது. அப்படி வீசினால், அபராதம் விதிக்கப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !