உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தென்னை வேர் வாடல் நிவாரணம் ரூ.5 கோடி நிலுவை! நிதி பெற நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி

தென்னை வேர் வாடல் நிவாரணம் ரூ.5 கோடி நிலுவை! நிதி பெற நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி

பொள்ளாச்சி : ''தென்னை வேர் வாடல் நோய் நிவாரணத்தில் நிலுவையுள்ள, ஐந்து கோடி ரூபாயை அரசிடம் கேட்டு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்தார்.பொள்ளாச்சி அருகே சமத்துாரில், மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. சப்-கலெக்டர் கேத்ரின் சரண்யா, உதவி கலெக்டர் (பயிற்சி) அங்கித்குமார் ஜெயின், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் சுரேஷ் மற்றும் அதிகாரிகள், பேரூராட்சி தலைவர் காளிமுத்து, துணை தலைவர் சக்திவேல் பங்கேற்றனர்.கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் தலைமை வகித்து, நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:குறைதீர்க்கும் நாளில் வழங்கப்படும் மனுக்கள், மக்கள் தொடர்பு முகாம்களில் வழங்கப்படும் கோரிக்கை மனுக்கள், முதல்வரின் முகவரி என்கிற இணையதளத்தில் பதிவு செய்யப்படுகின்றன. ஒவ்வொரு மனுக்களும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு 'போர்ட்டல்' வாயிலாக அனுப்பப்பட்டு, அதன் நிலை குறித்து கேட்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.தென்னை வாடல் நோய் மற்றும் தென்னை விவசாயிகளின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண முதல்வர் உடனடியாக சிறப்பு திட்டத்தை அறிவித்தார். அதன்படி, பாதிப்புக்குள்ளான தென்னை மரங்களுக்கு நிவாரணத்தொகை, புதிய தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.மண்ணில் தேவையான சத்துகள் இல்லாமல், அதன் வளம் குறைவதால்தான் தென்னை மரங்கள் பாதிக்கப்படுகின்றன. அதற்கு தகுந்தாற் போல, வேளாண்மை செய்வதில் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து வேளாண் துறை வாயிலாக விவசாயிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.உயர்கல்வி அனைவரும் பயில வேண்டும் என்பதற்காக கல்லுாரி கனவு திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்புதல்வன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இத்திட்டங்களுக்கான முகாம் நடைபெற்று வருகின்றன. உங்கள் பகுதியில், பிளஸ்2 படித்து விட்டு உயர்கல்வி படிக்காமல் இருப்பவர்கள், இம்முகாமில் கலந்து கொள்ளலாம்.இவ்வாறு, அவர் பேசினார்.முகாமில், 275 பயனாளிகளுக்கு, 89.87 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விரைவில் நிவாரணம்

மாவட்ட கலெக்டர், நிருபர்களிடம் கூறியதாவது:பொள்ளாச்சி கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், சி.எஸ்.ஆர்., பங்களிப்புடன், 'ஸ்டெம் லேப்' துவங்கப்பட்டுள்ளது. அரசூர், வெள்ளலுார் போன்ற பள்ளிகளை தொடர்ந்து, தற்போது பொள்ளாச்சியில் துவங்கப்பட்டுள்ளது.மேலும், தென்னை வேர் வாடல் நோய் பாதிக்கப்பட்ட மரங்களை அகற்ற, 18 கோடி ரூபாய் தமிழக முதல்வர் ஒதுக்கீடு செய்தார். அதில், முதற்கட்டமாக, 13 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள, ஐந்து கோடி ரூபாய், இரண்டு வாரத்தில் வாரும் என, அந்த துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அமைச்சரிடம் தெரிவித்து உடனடியாக அந்த நிதியை பெற்று அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்கப்படும். இவ்வாறு, கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை