எஸ்டேட்களில் அனுமதியின்றி ரிசார்ட்கள்; கண்டு கொள்ளாத அதிகாரிகள்
வால்பாறை; எஸ்டேட் பகுதியில் விதிமுறையை மீறி செயல்படும் 'ரிசார்ட்'களுக்கு 'சீல்' வைக்க வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மானாம்பள்ளி, வால்பாறை ஆகிய இருவனச்சரகங்களில், பல்வேறு எஸ்டேட் பகுதியில் உள்ள யானைகள் வழித்தடங்களை எஸ்டேட் நிர்வாகங்கள் ஆக்கிரமித்து சுற்றுலாபயணியர் தங்குவதற்கு வசதியாக 'ரிசார்ட்' கட்டப்பட்டுள்ளன.இந்த ரிசார்ட்கள் அனைத்தும் அரசின் முறையான அனுமதி பெறாமல், சட்ட விரோதமாக நடத்தப்படுகிறது.இது குறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் 'ரிசார்ட்கள்' துவங்க வேண்டும் என்றால், வனத்துறை, மாவட்ட நிர்வாகம், நகராட்சி துறை, மலையிட பாதுகாப்பு குழுமம், இயக்குனரகம், தீயணைப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளிடம் இருந்து முறையாக அனுமதி பெற வேண்டும்.ஆனால், 'ரிசார்ட்'கள், எவ்வித அனுமதியும் பெறாமல் நடத்தப்படுகிறது. 'ரிசார்ட்' நடத்துபவர்கள் அங்கு தங்குபவர்களின் விபரம் குறித்து போலீசாருக்கு முறையாக தெரிவிப்பதில்லை.இதனால், குற்றசம்பவங்கள் அதிக அளவில் நடக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக எஸ்டேட் பகுதியில் யானை வழித்தடத்தில் விதிமுறையை மீறி கட்டப்பட்டுள்ள ரிசார்ட்கள் மீது நடவடிக்கை எடுக்க வனத்துறை அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.இதனால், பாழடைந்த பங்களாக்கள் கூட மேக்கப் செய்து ரிசார்ட்களாக மாற்றப்பட்டு வருகின்றன. வால்பாறையில் வாழ்விடம் தேடி அலையும் வனவிலங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், யானைகள் வழித்தடத்தில் உள்ள ரிசார்ட்களை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.போலீசாரிடம் கேட்ட போது, 'வால்பாறையில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் ரிசார்ட்களில் தங்கும், சுற்றுலா பயணியரின் விபரங்கள் குறித்த எந்த ஒரு தகவலும்போலீசாருக்கு முறையாக தெரிவிப்பதில்லை.பெரும்பாலான விடுதிகளில் பதிவேடுகளும் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. அனைத்து தங்கும் விடுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும் பெரும்பாலான தங்கும் விடுதிகளில் இன்று வரை கேமரா பொருத்தப்படவில்லை,' என்றனர்.
வனத்துறையினர் அலட்சியம்!
வால்பாறையில் உள்ள இரு வனச்சரகங்களிலும், அரசின் முறையான அனுமதி பெறாமல், யானை வழித்தடத்தில், 50க்கும் மேற்ப்பட்ட இடங்களில் 'ரிசார்ட்கள்' கட்டப்பட்டுள்ளன. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்க்கின்றனர்.வனவிலங்குகள் நடமாடும் பகுதியில் கட்டப்பட்டுள்ள 'ரிசார்ட்கள்' குறித்து வனத்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு நடந்தி, துறை ரீதியான நடவடிக்கை எடுத்து, அப்புறப்படுத்த வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.