கோவை:வெள்ளலுார் குப்பை கிடங்கில் ஏப்., மாதம் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைப்பதற்கு ரூ.76.70 லட்சம் செலவு செய்ததாக, கோவை மாநகராட்சியில் செலவு கணக்கு காட்டியிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், டீ, காபி மற்றும் உணவு செலவு மட்டும் ரூ.27.51 லட்சம் ஆகும்.கோவை மாநகராட்சியில் உள்ள, 100 வார்டுகளில் சேகரமாகும் குப்பை, 99வது வார்டில் உள்ள வெள்ளலுார் கிடங்கில் கொட்டப்படுகிறது. கோடை காலத்தில் தீ விபத்து ஏற்படுவது வாடிக்கை. கடந்த ஏப்., 6 முதல், 17 வரை கட்டுக்கடங்காமல் தீ பரவியது. மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் அதிகாரிகள், தீயணைப்பு அலுவலர்கள், போலீசார் முகாமிட்டு, தீயை அணைக்க முயற்சித்தனர். மருத்துவ குழுவினரும் வரவழைக்கப்பட்டு இருந்தனர். இவ்வகையில், 1,400 பேர் தினமும் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.தனியார் வாகனங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டன. பெட்ரோல், டீசல், ஆயில் போன்றவை மாநகராட்சியால் செலவு செய்து, நிரப்பப்பட்டது. மாநகராட்சி பொது நிதியில் இருந்து, 76 லட்சத்து, 70 ஆயிரத்து, 318 ரூபாய் செலவு செய்திருப்பதாக, கணக்கு எழுதப்பட்டிருக்கிறது. இது, நேற்று நடந்த மாமன்ற கூட்ட பார்வைக்கும், பதிவுக்கும் வைக்கப்பட்டது.அதேநேரம், வெள்ளலுார் குப்பை கிடங்கில் பரவிய தீயை அணைக்க, கமிஷனர் தலைமையில் செயல்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அனைத்து தரப்பு அலுவலர்கள் அடங்கிய குழுவினருக்கு மாமன்றத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இச்சூழலில், கிடங்கு வளாகத்தில், 'வாட்ச் டவர்' கட்டுவதற்கு ரூ.49.80 லட்சம் ஒதுக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் பதிலளித்ததாவது:வெள்ளலுார் கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்க, அனைத்து தரப்பினரும் பணிபுரிந்தனர். கவுன்சிலர்களும் உடனிருந்தனர். தண்ணீர் பீய்ச்சி அடிக்க தனியார் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. 11 மோட்டார்கள் தருவிக்கப்பட்டு, தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. மாநகராட்சி ஊழியர்களுக்கு பயிற்சியளித்து, அப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.குப்பை கிடங்கிற்குள் வாகனங்கள் சென்று வரும் வகையில், ரோடு போடப்பட்டு உள்ளது. குப்பை பிரித்துக் கொட்டப்பட்டு இருக்கிறது. டிரோன் மூலமும், குப்பையின் வெப்பத்தை கண்டறியும், நவீன கருவி மூலமும் கண்காணிக்கிறோம்.45 அடி உயரத்தில் இருந்து கிடங்கை பார்வையிடும் வகையில், 'வாட்ச் டவர்' அமைக்கப்படும். உக்கடம் கழிவு நீர் பண்ணையில் சுத்திகரித்த நீர் எடுத்து வர முடியும். இனி, குப்பையில் தீப்பிடிக்கும் பிரச்னை வராது; அவ்வாறு வந்தாலும் உடனடியாக அணைப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு, கமிஷனர் கூறினார்.
உணவுக்கு ரூ.27 லட்சமாம்!
இது, கமிஷனர் கணக்குவெள்ளலுார் குப்பை கிடங்கில் தீ விபத்து நடந்த நாட்களில் என்ன நடந்தது என்பதை விளக்கும் வகையில், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதன் விவரம்:எதிர்பாராத விதமாக, ஏப்., 6ம் தேதி மாலை, 5:00 மணிக்கு வெள்ளலுார் குப்பைக்கிடங்கில் தீப்பிடித்தது. வெள்ளலுார் சுற்றுப்புறங்களில் அதிக புகைமூட்டம் பரவியது. அப்பகுதி பொதுமக்களின் உடல் நலம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, போர்க்கால அடிப்படையில் தீயை அணைக்க முயற்சிஎடுக்கப்பட்டது.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் தருவிக்கப்பட்டன. நாளொன்றுக்கு சராசரியாக, 13 தீயணைப்fபு வாகனங்கள், அவற்றை இயக்க ஒரு வண்டிக்கு 14 பேர் பணிபுரிந்தனர். தண்ணீர் சப்ளை செய்ய, தண்ணீர் லாரிகள், 23 எண்ணிக்கையில் இருந்து, 42 வரை பயன்படுத்தப்பட்டன.தீ பரவிய, 12 நாட்களில், 500 முதல், 600 நபர்கள், சுழற்சி முறையில் தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர், மாநகராட்சி அலுவலர்கள், மருத்துவ குழுவினர் என, மூன்று குழுக்கள் அமைத்து, 24 மணி நேரமும் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தினமும் காலை, மதியம் மற்றும் இரவு தரமான உணவு வழங்கப்பட்டது. வெயில் காலம் என்பதால், 24 நேரமும் குடிநீர், மோர், பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. அதற்கு, ரூ.27.52 லட்சம் செலவானது.இவ்வாறு, கமிஷனர் கூறியுள்ளார்.
மாமன்ற கூட்டத்தில்
அதிர்ச்சி தந்த 'கணக்கு' தீயணைப்பு பணியில் ஈடுபட்ட அலுவலர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு உணவு மற்றும் டீ, காபி, குளிர்பானங்கள் மற்றும் பழங்கள் வாங்கியதற்காக, 27 லட்சத்து, 51 ஆயிரத்து, 678 ரூபாய்; பெட்ரோல், டீசல், ஆயில் உள்ளிட்டவற்றுக்கு, 18 லட்சத்து, 29 ஆயிரத்து, 731 ரூபாய்; காலணிகள் (பூட்ஸ்) ரூ.52 ஆயிரத்து, 348; முகக்கவசம் (மாஸ்க்), ஒரு லட்சத்து, 82 ஆயிரத்து, 900 ரூபாய்; பொக்லைன் மற்றும் லாரி வாடகை - 23 லட்சத்து, 48 ஆயிரத்து, 661 ரூபாய்; தண்ணீர் டேங்கர் லாரி வாடகை (பேரூராட்சி மற்றும் தனியார் வாகனம்) - 5 லட்சத்து, 5 ஆயிரம் ரூபாய் என, மொத்தம், 76 லட்சத்து, 70 ஆயிரத்து, 318 ரூபாய் செலவு செய்திருப்பதாக, மாநகராட்சி கணக்கு காட்டியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.