தேசிய மக்கள் நீதி மன்றத்தில் வழக்குகள் தீர்வு
பொள்ளாச்சியில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில், 1,363 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, 537 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.பொள்ளாச்சி சப் - கோர்ட்டில், பொள்ளாச்சி வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில், தேசிய மக்கள் நீதிமன்றம் (தேசிய லோக் அதலாத்) நடைபெற்றது.சப் - கோர்ட் நீதிபதி மோகனவள்ளி, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பாரதிராஜன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சுஜாதா, குற்றவியல் நீதித்துறை நடுவர் ஸ்வேதாரன்யன் முன்னிலை வகித்தார்.வக்கீல் சங்கத் தலைவர் துரை, மூத்த வக்கீல்கள் ரவி, பிரவீன், சுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.இதில், சப் - கோர்ட், மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றம், கூடுதல் முதன்மை உரிமையியல் நீதிமன்றம், ஜே.எம்., 1, ஜே.எம்.,2 கோர்ட்டுகளில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள், செக்மோசடி, உணவு கலப்பட வழக்குகள், மோட்டார் வாகன சட்டத்துக்கு எதிரான வழக்குகள், ஜீவானம்சம் வழக்கு, விபத்து காப்பீடு வழக்குகள் விசாரிக்கப்பட்டன.மொத்தம், 1,363 வழக்குகள் விசாரிக்கப்பட்டு, 537 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மொத்தம், 5 கோடியே, 89 லட்சத்து, 17 ஆயிரத்து, 662 ரூபாய்க்கு இழப்பீடு சமரசம் செய்யப்பட்டதாக, வட்ட சட்டப்பணிகள் குழுவினர் தெரிவித்தனர். உடுமலை
உடுமலை, மடத்துக்குளம் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில், 529 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில், உடுமலை நீதிமன்றத்தில், தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது.இரண்டு அமர்வுகளாக நடந்ததில், முதல் அமர்வில், சார்பு நீதிபதி மணிகண்டன், வக்கீல் செந்தில்குமார், இரண்டாம் அமர்வில் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பாலமுருகன், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-1, நீதிபதி நித்யாகலா மற்றும் அரசு வக்கீல்கள் சேதுராமன், ரவிச்சந்திரன், இன்சூரன்ஸ் நிறுவன அலுவலர்கள், வங்கி மேலாளர்கள், வக்கீல்கள் பங்கேற்றனர்.இதில், 15 வங்கி வாராக்கடன் வழக்குகளுக்கு, 13 லட்சத்து, 16 ஆயிரத்து, 769 ரூபாய்; 215 தண்டனைக்குரிய சிறு வழக்குகளுக்கு, 6 லட்சத்து, 21 ஆயிரத்து, 600 ரூபாய்; 67 மோட்டார் வாகன விபத்து வழக்குகளில், 3 கோடியே, 90 லட்சத்து, 50 ஆயிரம்;இரு ஜீவனாம்ச வழக்குகளில், ரூ.5.5 லட்சம், 10 சிவில் வழக்குகளில், 74 லட்சத்து, 98 ஆயிரத்து, 953 ரூபாய் என, மொத்தம், 309 வழக்குகளுக்கு, 4 கோடியே, 90 லட்சத்து, 46 ஆயிரத்து, 322 ரூபாய் மதிப்பில் தீர்வு காணப்பட்டது. மடத்துக்குளம்
மடத்துக்குளம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் நடந்த லோக்அதாலத் நிகழ்ச்சியில், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நீதிபதி விஜயகுமார், வக்கீல் உதயகுமார் மற்றும் வக்கீல்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.இதில், 220 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, 11 லட்சத்து, 60 ஆயிரத்து, 300 ரூபாய் மதிப்பில் தீர்வு காணப்பட்டது. வால்பாறை
வால்பாறை கோர்ட்டில் நடந்த லோக் அதாலத்தில், 21 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.வால்பாறை கோர்ட்டில் நிலுவையில் உள்ள பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காணும் வகையில் லோக் அதாலத் (மக்கள்நீதிமன்றம்) நடத்தப்பட்டது. மாஜிஸ்திரேட் மீனாட்சி தலைமை வகித்தார். வட்ட சட்ட பணிகள் குழு உறுப்பினர் வக்கீல் விஸ்வநாதன் வரவேற்றார்.நிகழ்ச்சியில், மக்கள் நீதிமன்றத்தின் வாயிலாக மொத்தம், 80 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, 21 வழக்களுக்கு தீர்வு காணப்பட்டது.இது தவிர பணம் கொடுக்கல் வாங்கல் வழக்குகளில், 2 லட்சத்து, 20 ஆயிரம் ரூபாய், செக் மோசடி வழக்கில், 3 லட்சம் ரூபாய், வசூலிக்கப்பட்டது.மேலும் திருட்டுத்தனமாக பிராந்தி விற்ற, 11 பேருக்கு, 7,750 ரூபாய் அபராதம் விதிக்கபட்டது. மோட்டார் வாகன தொடர்பான வழக்குகளில், 55 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கபட்டது. - நிருபர் குழு -