பாலியல் தொல்லை தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம்
பெ.நா.பாளையம்; குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுத்தல் குறித்து, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது.பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள தொடக்க பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் பெரியநாயக்கன்பாளையம் வட்டார மேற்பார்வையாளர் ரேணுகா முன்னிலை வகித்தார். பெரியநாயக்கன்பாளையம் வட்டார கல்வி அலுவலர்கள் ராஜேந்திரன், ராஜம்மாள் ஆகியோர் தலைமை வகித்தனர். கோவை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் லட்சுமி ராமநாராயணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பயிற்சியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பெரியநாயக்கன்பாளையம் வட்டார ஆசிரியர் பயிற்றுனர் நித்யா ராஜகோபால் பேசியதாவது: ஒரு குழந்தை பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டு இருந்தால், உளவியல் சார் அறிகுறிகள் குழந்தையிடம் காணப்படலாம். அதாவது, குழந்தை தனிமைப்படுத்திக் கொள்ளுதல், ஆளுமை மாற்றம், மனவெழுச்சி மாற்றம் மற்றும் பாதுகாப்பற்ற உணர்வுடன் காணப்படுதல், அதிக கோபத்தை வெளிப்படுத்தும் குணம் உடையவராக இருக்கலாம். உடல் சார் அறிகுறிகள் என்றால், உடலின் பல பாகங்களில் வலி மற்றும் காயங்கள் இருக்கலாம். தன்னைத்தானே காயப்படுத்தி கொள்ளுதல், சிறு குழந்தை போன்று நடந்து கொள்ளுதல், உணவு பழக்கத்தில் மாற்றம் ஏற்படலாம். நடத்தை சார் அறிகுறிகள் என்றால் குறிப்பிட்ட நபர்களுடன் தனித்திருக்க விருப்பமின்மை, பழைய, புதிய நண்பர்களை பற்றி பேசுதல், யாருக்கும் தெரியாமல் பணம் பரிசுப் பொருட்கள் போன்றவற்றை வைத்திருத்தல் என வரையறுக்கப்பட்டுள்ளது என்றார்.நிகழ்ச்சியில், பெரியநாயக்கன்பாளையம் வட்டார சுகாதார ஆய்வாளர் ஜெகன், துடியலூர் எஸ்.ஐ., சரவணன் உள்ளிட்டோர் பேசினர்.