சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே, ஐயப்பன் நகரில், சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.மேட்டுப்பாளையம் சிக்கதாசம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட டேங்க் மேடு ஐயப்பன் நகரில், சக்தி விநாயகர் கோவிலில், கோபுரம் அமைத்து, மகா மண்டபம் கட்டப்பட்டது. கோபுரத்திற்கு வர்ணம் பூசி திருப்பணிகள் முடிந்த பின்பு கும்பாபிஷேக விழா நடந்தது. இரண்டாம் தேதி பிள்ளையார் வழிபாடுடன் விழா துவங்கியது. மாலையில் தீர்த்த குடங்களும், முளைப்பாரிகளையும் ஊர்வலமாக எடுத்து வந்தனர். கோவிலை சுற்றி புனித நீர் தெளித்து, திருமகள் வழிபாடு, என் திசை காவலர் வழிபாடு செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து முதற்கால வேள்வி பூஜையும் துவங்கியது.பின்பு கோபுரத்தில் விமான கலசம் நிறுவப்பட்டது. மூலவர் திருமேனியை பீடத்தில் நிறுவி, எண் வகை மருந்து சாற்றப்பட்டது. அதன் பின்பு, 108 மூலிகைகள் கொண்டு பூஜையும், பேரொளி வழிபாடும், மலர் அர்ச்சனையும் செய்தனர்.நேற்று காலை திருப்பள்ளி எழுச்சியும், இரண்டாம் கால வேள்விபூஜையும் நடந்தன. பின்பு ஒன்பது மணிக்கு யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்களை எடுத்து கோவிலை சுற்றி வந்தனர். 9:30 மணிக்கு கோபுர கலசத்தின் மீதும், அதைத்தொடர்ந்து மூலவர் சிலை மீதும், புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். சாந்தலிங்கர் அருள்நெறி மன்றத்தை சேர்ந்த மூலத்துறை குழந்தைவேல், சக்திவேல், சந்திரசேகரன் ஆகியோர் யாக வேள்வி பூஜைகளை செய்தனர். கோவை மாவட்ட ஹிந்து முன்னணி செயலாளர் சதீஷ்குமார் உட்பட ஏராளமான பக்தர்கள் விழாவில் பங்கேற்று விநாயகரை வழிபட்டுச் சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஐயப்பன் நகர் விழா கமிட்டியினர் ஊர் பொதுமக்கள் ஆகியோர் செய்திருந்தனர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.