உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரயிலில் போதை மாத்திரை கடத்தல்; இருவர் கைது

ரயிலில் போதை மாத்திரை கடத்தல்; இருவர் கைது

கோவை; ராஜஸ்தானில் இருந்து ரயிலில் போதை மாத்திரை கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன் போதை மாத்திரை வைத்திருந்ததாக கேசவன், 25, சரண்ராஜ், 26, அஜித் குமார், 25, தினேஷ், 26 மற்றும் முகமது ஹசன், 27 ஆகயோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 300 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.அவர்களிடம் விசாரித்ததில், அவர்கள் கோவையில் வசிக்கும் ராஜஸ்தானை சேர்ந்த பப்பு ராம், 25 என்பவரிடம் இருந்து போதை மாத்திரைகள் வாங்குவதாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் பப்பு ராமை பிடித்து விசாரித்ததில் போலி மருந்து சீட்டு பயன்படுத்தி ராஜஸ்தானில் இருந்து மாத்திரைகள் வாங்குவதாக தெரிவித்தார். மாத்திரைகளை, ராஜஸ்தானில் உள்ள தனது நண்பர், ரயில் ஏசி பெட்டியில் பணியாற்றும் தற்காலிக பணியாளர் சிக்கந்தர் என்பவரிடம் கொடுத்து கடத்தி வருவதாகவும்,அதை பப்பு ராம் இங்கு பெற்றுக்கொண்டு விற்பனை செய்வதாகதெரிவித்தார்.பப்பு ராமின் தகவலின் பேரில் போலீசார் நேற்று முன்தினம் கோவை வந்த ஹிசார் எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை செய்தனர். அப்போது, ரயில் ஏசி பெட்டியில் சுமார், 7800 மாத்திரைகள் கொண்டு வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ஹரியானாவை சேர்ந்த ஏசி பெட்டி பணியாளர் சிக்கந்தர், 21 மற்றும் பப்பு ராம், 25 ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.இது தொடர்பாக நேற்று போலீஸ் கமிஷனர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், ''தற்போது, ரயிலில் கொண்டு வரப்பட்ட 7800 மாத்திரைகள் பிடித்துள்ளனர். இருவர் கைது செய்யப்பட்டனர். இதேபோல், மாநகர பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்பனை, சைபர் கிரைம் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு மட்டும், ரூ. 93 கோடி சைபர் கிரைம் மோசடி நடந்துள்ளது. அதில், 49 கோடி பணம் முடக்கப்பட்டுள்ளது. ரூ. 10 கோடி பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. சைபர் கிரைம் குற்றவாளிகள் ஏழு பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை