உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எப்படி இருக்கின்றன வனப்பகுதிகள் கண்டறிய வந்தது மண்வள அட்டை

எப்படி இருக்கின்றன வனப்பகுதிகள் கண்டறிய வந்தது மண்வள அட்டை

கோவை;தமிழகத்தில் உள்ள 28 வனக்கோட்டங்களுக்கான வன மண்வள அட்டை வெளியிடப்பட்டுள்ள நிலையில், கேரளா, அந்தமான், நிக்கோபர் தீவுகள் மற்றும் லட்சத்தீவு ஒன்றிய பகுதிகளுக்கான, வன மண் வள அட்டை தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், 2015ம் ஆண்டில், ரூ.568.84 கோடி மதிப்பில், விவசாய நிலங்களுக்கான மண் வள அட்டை திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இருப்பினும், நாட்டின் வனப்பகுதிகள் இத்திட்டத்தில் சேர்க்கவில்லை.எனவே, மத்திய அரசின் சுற்றுச்சூழல் வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், இந்தியாவில் உள்ள அனைத்து வனப்பிரிவுகளிலும், வள மண் வள அட்டை தயாரித்தல் என்ற, அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.ஈடுசெய் காடு வளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்ட ஆணையம் வாயிலாக, இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி குழுமத்துக்கு, இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.19.57 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.நாட்டில் உள்ள அனைத்து 788 வனப்பிரிவுகளுக்கும், வன மண்வள அட்டைகள், 12 மண் ஆய்வு காரணிகளுக்கான 5 லட்சம் ஆய்வுகள், மண் ஆய்வகங்களில் செய்யப்பட உள்ளன.வன வகைப்பாட்டின் அடிப்படையில், அடர் காடுகள், மித அடர் காடுகள், திறந்தவெளி காடுகள், புதர் காடுகள் மற்றும் காடுகளற்ற பகுதிகளில் மண் மாதிரி சேகரிப்பு நெறிமுறைகளை பின்பற்றி மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக, பல்வேறு மாநிலங்களில் வன மண் வள அட்டைகள் வெளியிடப்பட்டு வருகின்றன.தமிழகத்தில் உள்ள 28 வனக்கோட்டங்களுக்கான வன மண்வள அட்டையை, கடந்த பிப்ரவரியில், இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி குழுமத்தின் 61வது நிர்வாக குழு கூட்டத்தில், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சக செயலாளர் லீனா நந்தன் வெளியிட்டார். வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவன இயக்குனர் குன்னிகண்ணன் பங்கேற்றார்.

தயாரிப்பு எதற்காக?

வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவன விஞ்ஞானி சூரிய பிரபா கூறுகையில், ''வன வகைகள் மற்றும் வன வகுப்புகளின் அடிப்படையில், புவியியல் தகவல் அமைப்பு மற்றும் தொலையுணர்வு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மண் மாதிரி சேகரிக்கும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. கேரளா, அந்தமான், நிக்கோபர் தீவுகள் மற்றும் லட்சத்தீவு ஒன்றிய பகுதிகளுக்கான வன மண் வள அட்டை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. வன மண்வள அட்டைகள், மண் தொடர்பான பிரச்னைகளை கண்டறிய, காடுகளில் உற்பத்தியை அதிகரிக்க, அவற்றின் மேலாண்மை நடைமுறைகளை பரிந்துரைக்க பயனுள்ளதாக இருக்கும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி