உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆவணியில் சோளம் விதைக்கலாம் வாங்க! அழைக்கிறார் வேளாண் இணை இயக்குனர்

ஆவணியில் சோளம் விதைக்கலாம் வாங்க! அழைக்கிறார் வேளாண் இணை இயக்குனர்

கோவை:''கோ32, கே12 சோள ரகங்கள் மானிய விலையில், கிலோ ரூ.30க்கு வழங்கப்படுகிறது,'' என்று, கோவை வேளாண் இணை இயக்குனர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:கோவை மாவட்டத்தில் 30,270 எக்டரில் சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. பெரும்பாலும் மானாவாரி சாகுபடி நடக்கிறது. ஆவணி மாதத்தில், சோளம் விதைக்க ஏற்ற நிலை உள்ளது. நடப்பு பட்டத்தில், கோ 32, கே12 ரகங்கள் சாகுபடி செய்ய ஏற்றவை. கோ 32 ரகம் 110 நாட்கள் சாகுபடிக்காலம். 2.5 ஏக்கருக்கு 3,100 கிலோ மகசூல் கிடைக்கும். தட்டு, 11,453 கிலோ கிடைக்கும். கே12 ரகம் 2.5 ஏக்கருக்கு 3,500 கிலோ மகசூல் கிடைக்கும்.மானாவாரியில் அடியுரமாக ஏக்கருக்கு, 35 கிலோ யூரியா, 50 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரத்தை, தொழு உரத்துடன் கலந்து, கடைசி உழவில் இட வேண்டும். நோய் பரவாமல் தடுக்க, விதை நேர்த்தி செய்ய வேண்டும்.காற்றில் உள்ள தழைச்சத்து பயிருக்குக் கிடைக்க, திரவ உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா தலா 500 மில்லி கலந்து விதைக்க வேண்டும்.விதைத்த 3 நாட்களுக்குள், 11 நுண்ணூட்டச் சத்துகள் கிடைக்கும் வகையில், 5 கிலோ தானிய நுண்ணூட்டக் கலவையை, மணலுடன் கலந்து மேலாக இட வேண்டும்.இந்த விதைப்பு நுட்பங்களுக்குத் தேவையான சூடோமோனஸ் புளூரசென்ஸ், திரவ உயிர் உரங்கள் மற்றும் தானிய நுண்ணூட்டக் கலவைகள், 50 சதவீத மானியம் அல்லது எக்டருக்கு அதிகபட்சமாக ரூ.500 என்ற அளவில், வேளாண்மை விரிவாக்க மையங்கள் வாயிலாக வழங்கப்படுகிறது.கோ32, கே12 சோள ரகங்கள் மானிய விலையில், கிலோ ரூ.30க்கு வழங்கப்படுகிறது. தொடர்புடைய வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை அணுகி, இடுபொருட்களைப் பெற்று விவசாயிகள் பயனடையலாம்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி