கோவை;பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், தேர்ச்சி பெறாத மாணவ, மாணவியரை அடையாளம் கண்டு, அவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தி, உடனடி தேர்வில் பங்கேற்க வைக்க, கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தியுள்ளார்.கோவை மாநகராட்சி சார்பில், 17 மேல்நிலைப்பள்ளிகள், 10 உயர்நிலைப்பள்ளிகள் நடத்தப்படுகின்றன. 1,631 மாணவ, மாணவியர் பிளஸ் 2 தேர்வு எழுதியதில், 1,500 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்கள் அனைவரையும் கல்லுாரியில் சேர்ப்பதற்கான முயற்சியில், மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு, மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன.என்றாலும் கூட, பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஒரு பள்ளி கூட, 100 சதவீத தேர்ச்சியை எட்டவில்லை. இதற்கான காரணங்கள் தொடர்பாக, மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர்களுடன், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆலோசித்தார். ஆர்.எஸ்.புரம் பள்ளியில் ஒரே ஒரு மாணவி தேர்ச்சி பெறாததால், நுாறு சதவீத தேர்ச்சி கைநழுவியிருக்கிறது.ரத்தினபுரி மாநகராட்சிப்ள்ளியில் ஒரு மாணவன், ஒரு மாணவி மட்டும் தேர்ச்சி பெறவில்லை. ராமகிருஷ்ணா புரம் பள்ளியில் இரு மாணவியர் பெயில். மணியகாரன்பாளையத்தில் இரு மாணவர்கள் தேர்ச்சியில்லை.வெங்கிட்டாபுரம் பா.கமல நாதன் நினைவு பள்ளியில், 26 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். ஆனால், மூன்று மாணவியர் தேர்ச்சி பெறாதது தெரியவந்தது. இம்மாணவர்களை உடனடி தேர்வெழுத வைக்க, மாநகராட்சி நிர்வாகம் முடிவெடுத்திருக்கிறது. இதேபோல், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, 2,003 மாணவ, மாணவியர் எழுதியதில், 1,765 பேரே தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.உடையாம்பாளையம், வரதராஜபுரம், சித்தாபுதுார் பள்ளிகள் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றிருக்கின்றன. என்றாலும், ஐந்து மாணவ, மாணவியர் தேர்ச்சி பெறாததால், ஒன்பது பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை நழுவ விட்டிருக்கின்றன. இதற்கான காரணிகளை, மாநகராட்சி கல்வி பிரிவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.'தேர்ச்சி பெறாதவர்களைதேர்ச்சி பெற வைப்போம்'தேர்ச்சி பெறாத மாணவ, மாணவியரை அடையாளம் கண்டு, அவர்களுக்கென சிறப்பு மையம் ஏற்படுத்தப்படும். அம்மாணவர்களுக்கு மீண்டும் சிறப்பு வகுப்பு நடத்தி, உடனடி தேர்வெழுத வைத்து, தேர்ச்சி பெற முழு முயற்சி எடுப்போம். நடப்பு கல்வியாண்டு துவக்கத்திலேயே, பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான பொருட்கள் வாங்கிக் கொடுத்து, சிறப்பு கவனம் செலுத்தப்படும். கடந்த கல்வியாண்டில், கடைசி மூன்று மாதங்கள் மட்டும் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது. வரும் கல்வியாண்டில், துவக்கம் முதலே கவனம் எடுத்து போதிய பயிற்சி அளிக்கப்படும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களையும், உடனடியாக தேர்வெழுத வைக்க உள்ளோம்.- சிவகுரு பிரபாகரன் மாநகராட்சி கமிஷனர்