உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறப்பு அடையாள எண் முகாம்; பதிவு செய்ய விவசாயிகள் தீவிரம்

சிறப்பு அடையாள எண் முகாம்; பதிவு செய்ய விவசாயிகள் தீவிரம்

பெ.நா.பாளையம்; மத்திய, மாநில அரசின் பல்வேறு விவசாய நலத் திட்டங்களை உடனடியாக பெற, விவசாயிகளுக்கு தனித்துவமான அடையாள எண் வழங்கும் சிறப்பு முகாமில், பதிவு செய்ய விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.நாடு முழுவதும், விவசாயிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. இதற்காக, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை வாயிலாக விவசாயிகளின் நில உடமைகளை உள்ளடக்கிய தரவுகளை சேகரித்து, அதற்கான செயலியில் பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இச்செயலியில், விவசாயிகளின் நில உடமைகளை சரி பார்த்து, ஆதார் எண் போல விவசாயிகளுக்கான தனித்துவமான அடையாள எண் வழங்கும் சிறப்பு முகாம், தமிழகம் முழுவதும் தற்போது நடந்து வருகிறது.இது அந்தந்த பகுதியில் உள்ள வருவாய் கிராமங்களில் முக்கிய இடங்களில் நடத்தப்படுகிறது. மேலும், பொது இ சேவை மையங்களிலும் விவசாயிகள், தங்களது ஆதார் எண், நில உடைமைகளை இலவசமாக பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் வாயிலாக விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள பொது இ சேவை மையத்தை பயன்படுத்தி பட்டா, ஆதார் அட்டை, மொபைல் எண் ஆகியவற்றை கொண்டு பதிவு செய்யலாம்.இனிவரும் காலங்களில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களின் பயன்களை ஒற்றைச் சாளர முறையில் விவசாயிகள் எளிதில் பெறலாம். குறிப்பாக, விவசாயிகளின் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தவும், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை, வேளாண் வணிகம், கால்நடை பராமரிப்பு, வேளாண்மை பொறியியல் உள்ளிட்ட பல்வேறு விவசாயம் சார்ந்த துறை திட்டங்களின் பயன்களை எளிதில் பெறலாம்.இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் வேளாண் துறையினர் கூறுகையில், ''பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் பிரதமரின் கவுரவ உதவி திட்டத்தில், 3,303 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். இதில், 2,300 விவசாயிகள் இதுவரை தனித்துவ அடையாள எண் பெறுவதற்காக பதிவு செய்துள்ளனர்.மீதமுள்ளவர்கள் உடனடியாக அந்தந்த பகுதியில் உள்ள பொது இ சேவை மையத்தில் தங்களது நில உடமை ஆவணங்களை சமர்ப்பித்து, தனித்துவ அடையாள எண் பெற 31ம் தேதிக்குள் பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி