| ADDED : மே 06, 2024 10:40 PM
பொள்ளாச்சி;அரசு மருத்துவமனைகளில் 'ஹீட் ஸ்ட்ரோக்' நோயாளிகளுக்கான சிறப்பு வார்டுதுவங்கப்பட்டது.கோவை மாவட்டத்தில்,கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக,கோடை வெப்பம் வாட்டி வருகிறது. இந்த ஆண்டு கோடை வெயில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.இந்நிலையில்,வெப்ப பாதிப்பு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் கோவை மாவட்டம்,பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனை, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை உட்பட கோவை மாவட்டத்தில் உள்ள, 12 அரசு மருத்துவமனைகளில் கோடை வெப்ப நோய்க்கான சிறப்பு வார்டு துவங்கப்பட்டுள்ளது.குளிர்சாதன வசதி கொண்ட இந்த வார்டில்,வெப்ப அலர்ஜியால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு வருபவர்களுக்கு முதலுதவி அளிக்க டாக்டர்கள், நர்ஸ்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் ராஜசேகர் கூறியதாவது:-அதிக வெப்ப தாக்குதலால் நான்கு வகையான பாதிப்புகள் ஏற்படும். வெப்ப எரிச்சலால் புண் ஏற்படும், தோல் சிவப்பாக மாறும், கால்களில் நரம்பு இழுத்துக் கொள்ளும், நீர்ச்சத்து குறைவால் வயிற்று வலி ஏற்படும்.கோடை காலத்தில் உடலில் நீர் சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்காக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உப்பு சர்க்கரை கரைசல் வழங்கப்படுகின்றன. வெப்ப அலர்ஜி அல்லது வெப்ப பக்கவாத நோய் பாதிப்பு ஏற்படும் போது உடனடியாக உடல் வெப்பத்தை குறைக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும்.பாதிக்கப்பட்டவர்களின் கழுத்து பகுதி, முழங்கால் மடிப்பு உள்ளிட்ட பகுதிகளில் ஐஸ்கட்டிகளை கொண்டு ஒத்தடம் கொடுக்க வேண்டும், உடலுக்கு நீர்ச்சத்து கிடைக்க குளுக்கோஸ், உப்பு கரைசல் நீரை வழங்கி,தாமதம் இல்லாமல் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு பாதிப்புக்கு உள்ளானவர்களை அழைத்து வரவேண்டும்.அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வதற்கு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.