கோவை;கோவை மாநகராட்சி ஊழியர்களுக்கான குழு விளையாட்டு போட்டிகளில், வீரர் - வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மாநகராட்சியில் பணியாற்றும் உயர் அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு, மாநகராட்சி சார்பில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. 40 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் 40 வயதுக்கு மேற்பட்டோர் என, இரு பிரிவுகளில் ஆண்களுக்கு கிரிக்கெட், கால்பந்து, வாலிபால், செஸ், இறகுப்பந்து ஆகிய போட்டிகளும், பெண்களுக்கு த்ரோபால், டென்னிகாய்ட், செஸ், கேரம், இறகுப்பந்து உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்படுகின்றன. இப்போட்டியில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தியம் மற்றும் மாநகராட்சி பிரதான அலுவலகம் என ஆறு அணிகளை சேர்ந்த, 450க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்கள்
டென்னிகாய்ட் 40 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒற்றையர் பிரிவில், மத்திய மண்டல அணி முதலிடம், கிழக்கு மண்டல அணி இரண்டாமிடம் பிடித்தன. 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில், மேற்கு மண்டலம் முதலிடம், வடக்கு மண்டலம் இரண்டாமிடம் பிடித்தன. 40 வயதுக்கு உட்பட்டோருக்கான த்ரோபால் போட்டியில், வடக்கு மண்டலம் முதலிடம், மேற்கு மண்டலம் இரண்டாமிடம் பிடித்தன. 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான த்ரோபால் போட்டியில், மாநகராட்சி 'ஏ' அணி முதலிடமும், மாநகராட்சி 'பி' அணி இரண்டாமிடம் பிடித்தன. ஆண்களுக்கான வாலிபால் போட்டியில், கிழக்கு மண்டலம் முதலிடம், மேற்கு மண்டலம் இரண்டாமிடம்; கால்பந்தில் மேற்கு மண்டலம் முதலிடம், வடக்கு மண்டலம் இரண்டாமிடம் பிடித்தன.