பள்ளி, கல்லுாரிகளில் ஆசிரியர் தினம் ஆசிரியர்களை வரவேற்ற மாணவர்கள்
கோவை;சொக்கம்புதுார், எஸ்.பி.ஓ.ஏ., மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற டாக்டர் தாமரை செல்வன்,''ஆசிரியர் இல்லாமல் எதுவும் இல்லை. ஆசிரியர்கள் எல்லாவற்றிலும் முதன்மையானவர்கள்,'' என்றார்.முன்னதாக, பள்ளி தாளாளர் முருகேசன், மாணவர்களுக்கு கல்வியை மட்டும் கற்றுக்கொடுக்காமல் கல்வியோடு நற்பண்பையும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று பேசினார். இந்தாண்டுக்கான நல்லாசிரியர் விருதை பள்ளி தாளாளர் முருகேசன் வழங்க, புகழேந்தி, பிரேமா சேது, சரோஜா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.நிறைவில், கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி முதல்வர் சபுரால் பானு இப்ராஹிம், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் செல்வகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேசத்தின் எதிர்காலம்!
ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. மாணவியரின் பாட்டு, நடனம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. தொடர்ந்து, ஆசிரியர்களுக்கு, மாணவியர் நினைவுப்பரிசு வழங்கி, வாழ்த்து தெரிவித்தனர். கல்லுாரி முதல்வர் சித்ரா,''தற்போதைய நெருக்கடியான காலகட்டத்தில் தேசத்தின் எதிர்காலத்தை கட்டமைக்கும் மேன்மைமிக்க பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் ஆசிரியர்கள்,'' என, புகழாரம் சூட்டினார். அடையாளம் காட்டுபவர்!
பன்னிமடை அக்சயா அகாடமி சி.பி.எஸ்.இ., சீனியர் செகண்டரி பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. அவினாசிலிங்கம் இன்ஸ்டிடியூட் பார் ஹோம் சயின்ஸ் இயக்குனர் ராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மாணவர்கள், ஆசிரியர்களை மையமாக வைத்து, பட்டிமன்றம், ஆடல், பாடல், குறு நாடகம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பள்ளி செயலாளர் பட்டாபிராம் ஆசிரியர்களை வாழ்த்தி நினைவுப் பரிசுகள் வழங்கினார். நிறுவனர் புருஷோத்தமன், தாளாளர் சுந்தராம்பாள், முதல்வர் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.