நீடிக்கும் பூண்டு விலை உயர்வு
மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையத்தில் உள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் பூண்டு ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ. 470க்கு ஏலம் விடப்பட்டு, விற்பனை ஆனது. மேட்டுப்பாளையம் நெல்லித்துறை சாலையில், நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கம் மேட்டுப்பாளையம் கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்குகள், பூண்டுகள் ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் பூண்டு விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி நேற்று முன் தினம் பூண்டு விற்பனை செய்யப்பட்டது.நீலகிரி மாவட்டம் கூடலூர், கேத்தி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, விவசாயிகள் பூண்டு விற்பனைக்கு கொண்டு வந்தனர். அதிகபட்சமாக பூண்டு கிலோ ரூ.470க்கு விற்பனை ஆனது.இதுகுறித்து நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கம் அதிகாரிகள் கூறுகையில், பூண்டு அதிகபட்சமாக கிலோ ஒன்றுக்கு ரூ. 470க்கு ஏலம் போனது. கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.450க்கு அதிகபட்சமாக ஏலம் போனது. அதற்கு முன் ரூ.440க்கு போனது. தொடர்ந்து பூண்டு விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. வரத்து குறைவால் விலை உயர்கிறது. மேலும், ஊட்டி பூண்டுகளுக்கு வியாபாரிகளிடம் நல்ல வரவேற்பு உள்ளது. நேற்று முன்தினம் விற்பனை கூடத்திற்கு 38 பூண்டு மூட்டைகள் வந்தன. ஒரு மூட்டை சராசரியாக 50 கிலோ வரை இருக்கும், என்றனர்.