உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இறக்குமதி பஞ்சுக்கு தரக்கட்டுப்பாடு விலக்கு: மத்திய அரசுக்கு ஜவுளித்துறையினர் நன்றி

இறக்குமதி பஞ்சுக்கு தரக்கட்டுப்பாடு விலக்கு: மத்திய அரசுக்கு ஜவுளித்துறையினர் நன்றி

கோவை;இறக்குமதி செய்யப்படும் பஞ்சுக்கு தரக்கட்டுப்பாடு அவசியம் என்பதில் இருந்து விலக்கு அளித்திருப்பதால், ஜவுளித்துறையினர் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.ஜவுளித்தொழிலுக்கு மிக முக்கிய மூலப்பொருளான பாலியஸ்டர் பஞ்சு, பல்வேறு இழை நுால்கள் மற்றும் நுாற்பு நுால்களுக்கு, தரக்கட்டுப்பாடு அவசியம் என்கிற மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் உத்தரவு, 2023ல் அமலுக்கு வந்தது.இதனால், பி.ஐ.எஸ்., உரிமம் வைத்திருப்போரிடம் இருந்து மட்டுமே உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் இருந்து ஒவ்வொருவரும், மூலப்பொருட்கள் வாங்க வேண்டும் என்கிற கட்டாயம் ஏற்பட்டது.உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பி.ஐ.எஸ்., உரிமம் பெற்றிருந்தாலும், பல வெளிநாட்டு உற்பத்தியாளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள், ஆய்வு மற்றும் ஒப்புதலுக்காக, பி.ஐ.எஸ்., அதிகாரிகளிடம் இன்னும் நிலுவையில் இருக்கின்றன. இது, உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களை கடுமையாக பாதித்துள்ளது.இதேபோல், விஸ்கோஸ் பஞ்சுக்கு ஜவுளி அமைச்சகம் விதித்துள்ள தரக்கட்டுப்பாடு உத்தரவு ஏற்றுமதியாளர்களை பாதித்தது.அதனால், அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் உரிமம் வழங்க வேண்டும் அல்லது ஏற்றுமதி நோக்கத்துக்காக மட்டும் பயன்படுத்தப்படும் செயற்கை இழைகள் மற்றும் இழைகளுக்கு கட்டாயத் தரக்கட்டுப்பாடு உத்தரவில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தொழில்துறையினர் கோரிக்கை விடுத்தனர்.இதைத்தொடர்ந்து, இறக்குமதி செய்யப்படும் விஸ்கோஸ் பஞ்சு, பாலியஸ்டர் பஞ்சு, நுாலிழைகள் மற்றும் நுாற்பு நுால் ஆகியவற்றுக்கு தரக்கட்டுப்பாடு அவசியம் என்பதில் இருந்து, மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது.'அட்வான்ஸ் ஆதரை சேஷன்' திட்டத்தில், இறக்குமதி செய்யப்படும் அனைத்து வகையான செயற்கை பஞ்சுக்கும், இறக்குமதிக்கு முந்தைய நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும்.விதிவிலக்கை முன்கூட்டியே, 'அட்வான்ஸ் ஆதரைசேஷன்' உரிமத்தில் குறிப்பிட்டிருக்க வேண்டும். இந்த அறிவிப்பு, செயற்கை பஞ்சு ஜவுளி பொருட்கள் ஏற்றுமதியாளர்களுக்கு நிம்மதி அளித்துள்ளது.விலக்கு அளித்ததற்காக, மத்திய அரசுக்கு, தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவர் சுந்தரராமன் நன்றி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை