லாரி ஸ்டாண்டாக மாறிய ஒன்றாவது வார்டு
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் நகராட்சியின் ஒன்றாவது வார்டு, லாரிகளின் ஸ்டாண்டாக மாறியது. கோத்தகிரி சாலையிலும் மற்றும் இந்த வார்டில் உள்ள வீதிகளிலும் குப்பை குவிந்து கிடக்கின்றன. மேட்டுப்பாளையம் நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. பவானி ஆற்றின் கரையோரம், கோத்தகிரி, ஊட்டி சாலையில் நகராட்சியின் ஒன்றாவது (முதல்) வார்டு அமைந்துள்ளது. இந்த வார்டில் 15க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில்,1500 மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வார்டில் கட்டிய பழைய சாக்கடைகள், தற்போது வரை உள்ளன. ஆனால் சாக்கடைகள் சரியாக சுத்தம் செய்யாததால், கழிவு நீர் தேங்கி உள்ளது. இதனால் கொசு தொல்லை அதிகரித்துள்ளது. இதுகுறித்து முதல் வார்டு பொதுமக்கள் கூறியதாவது: எங்கள் பகுதிக்கு மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒரு முறை, குடிநீர் விநியோகம் சீராக வருகிறது. ஆனால் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாக்கடைகளை சுத்தம் செய்யாததால், கழிவுநீர் ஆங்காங்கே தேங்கியுள்ளது. இதிலிருந்து உற்பத்தியாகும் கொசுக்கள் தொல்லையால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். சாக்கடைகளை சுத்தம் செய்ய ஆட்கள் சரியாக வருவதில்லை. மேலும் வீதிகளின் ஒவ்வொரு பகுதி யிலும் குப்பை குவிந்து கிடக்கின்றன. அவற்றை சுத்தம் செய்வதில்லை. தெரு விளக்குகள் எரிவதில்லை. குப்பைகளை அகற்றவும், தெருவிளக்கு போடவும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர். இது குறித்து முதல் வார்டு கவுன்சிலர் தஷ்னிமா கூறுகையில், 'கோத்தகிரி சாலையில், ஒரே நேரத்தில் நான்கு வாகனங்கள் செல்லும் அளவிற்கு சாலை அகலமாக உள்ளது. ஆனால் தார் சாலையின் இருபக்கம், லாரிகளை நிறுத்தி, லாரி ஸ்டாண்டாக மாற்றி விட்டனர். இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் வெளி மாநிலங்களில் இருந்து, லாரிகளில் கிழங்கு மூட்டைகளை ஏற்றி வரும் பொழுது, மூட்டைகளுக்கு பாதுகாப்பாக வைத்து வரும் தடுக்குகளை, கோத்தகிரி சாலையின் ஓரத்தில் போட்டு விடுகின்றனர். இது மலை போல் குவிந்துள்ளது. இவற்றை அகற்றக்கோரி நகராட்சியிலும், நெடுஞ்சாலை துறையிலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கவுன்சிலர் கூறினார். இதுகுறித்து நகராட்சி தலைவர் மெஹரிபா பர்வீன் கூறியதாவது: ஒவ்வொரு வார்டிலும் சாக்கடைகளை சுத்தம் செய்ய, ஒருவர் மட்டுமே பணி அமர்த்தப்பட்டுள்ளார். அனைத்து வார்டுகளுக்கும் தூய்மை பணியாளர்கள் நியமிக்க வேண்டும். அதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொசு மருந்து அடிக்க இரண்டு பேர் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.