மேலும் செய்திகள்
'நம் முன்னோர்களின் அறிவு, ஆற்றல் நிகரற்றது'
29-Jan-2025
சூலுார்; ''நமது ராணுவத்தின் வலிமையும், சாதனைகளும், வீரர்களின் தியாகமும் போற்றத்தக்கது,'' என, முன்னாள் ராணுவ அதிகாரி மதன்குமார் பேசினார்.முத்துக்கவுண்டன் புதுார் சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கம் சார்பில் மாதந்திர விழிப்புணர்வு சொற்பொழிவு விவேகானந்தர் அரங்கில் நடந்தது. இயக்க தலைவர் சம்பத்குமார் மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்கள் ஏராளமோனார் பங்கேற்றனர்.'வலிமை மிகு பாரதம்' என்ற தலைப்பில், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி மதன் குமார் பேசியதாவது:உலகின் நான்காவது மிகப்பெரிய ராணுவமாக நமது நாட்டின் ராணுவம் உள்ளது. நம் ராணுவத்தை எந்த நாட்டு ராணுவத்துடனும் ஒப்பிட முடியாது. ஏனென்றால், உலகிலேயே தர்மத்தின் படியும், கட்டுக்கோப்பாகவும் செயல்படும் ஒரே ராணுவம் நம்முடையது. நாட்டை காக்க, நமது ராணுவம் மிகப்பெரிய சாதனைகளையும், வீரர்கள் மகத்தான தியாகங்களையும் செய்துள்ளனர். தொழில்நுட்ப ரீதியில் பலமடங்கு தற்போது முன்னேற்றம் கண்டுள்ளது. ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகளால், காஷ்மீரில் தீவிரவாதம் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தீரமான நடவடிக்கையால், சீனாவை நேருக்கு நேர் சந்தித்து, எல்லைக்கோட்டுக்கு அப்பால் அனுப்பியது நமது ராணுவம். புல்வாமா தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. அண்டை நாடுகள் நம்முடன் போருக்கு வராமல் இருக்க காரணம் நமது ராணுவத்தின் பலம் தான்.2014ம் ஆண்டுக்கு முன், 97 சதவீத துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் இறக்குமதி செய்யப்பட்டன. இன்று ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யும் அளவுக்கு உயர்ந்துள்ளோம். ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.சுய சார்பு பாரத திட்டத்தின் கீழ் நாமே தயாரித்த பிரம்மோஸ் ஏவுகணை, ஐ.என்.எஸ்., விக்ராந்த் கப்பல் ஆற்றல் மிகுந்தவை. கோவையை சேர்ந்த கல்லுாரி பேராசிரியர், வீரர்களுக்கான குண்டு துளைக்காத, தீப்பிடிக்காத உடையை தயாரித்துள்ளார். பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ராணுவத்தை வலிமையாக்கி வருகிறது பாரத அரசு. அக்னி பாத் திட்டத்தின் வாயிலாக ஏராளமான இளைஞர்கள் ராணுவத்தில் சேர்ந்து வருகின்றனர். நம் ஒவ்வொரு வீட்டில் இருந்தும் ஒரு ராணுவ அதிகாரி உருவாக வேண்டும். மற்ற துறைகளை விட ராணுவத்தில் கிடைக்கும் மரியாதை தனித்துவம் மிக்கது. இளைஞர்கள் ராணுவத்தில் சேர, குடும்பத்தினர் ஊக்கம் கொடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
29-Jan-2025