பெண்கள் கல்லுாரியில் அமர இடமில்லை; புது கட்டடம் கட்டியும் திறக்க மனமில்லை
கோவை : மாணவிகளின் நலன் கருதி கோவை, புலியகுளம் அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரியின் புதிய கட்டடத்தை திறக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.கோவையில் புலியகுளம் பெண்கள் அரசு கல்லூரி, 2020ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. துவக்கத்தில், பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பி.காம்., வணிகவியல், பி.எஸ்சி., கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.இன்று வரை அதற்கு மேல், துறைகள் ஏற்படுத்தப்படவில்லை. இக்கல்லுாரியில் ஏராளமான மாணவியர் பயின்று வருகின்றனர். இடப்பற்றாக்குறையை சமாளிக்க, ரூ.13.5 கோடி செலவில் புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது பணிகள் முழுவதும் முடிந்தும், இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. மின் இணைப்பு கொடுக்கும் பணி கடந்த, நான்கு மாதங்களுக்கும் மேல் நடந்து வருகிறது.தற்போது கல்லூரிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடந்து வரும் நிலையில் மாணவியர் கடும் அவதியடைந்து வருகின்றனர்.கல்லூரி முதல்வர் வீரமணி கூறுகையில், ''கல்லூரியில் புதிய கட்டடப்பணிகள், 99 சதவீதம் நிறைவடைந்து விட்டன. ஒரு சில சிறு பணிகள் மட்டுமே உள்ளன. மின்சார இணைப்பு போன்ற பணிகள் நடக்கின்றன. விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்,'' என்றார்.