உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாரதியார் பல்கலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு பணம் கொடுக்கணும்; சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழு வலியுறுத்தல்

பாரதியார் பல்கலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு பணம் கொடுக்கணும்; சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழு வலியுறுத்தல்

வடவள்ளி : பாரதியார் பல்கலை.,யில், தமிழக சட்டப்பேரவையின் அரசு உறுதிமொழி குழு ஆய்வு செய்தபோது, பாரதியார் பல்கலைக்கு நிலம் வழங்கியவர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை, வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்கலை., நிர்வாகத்திடம் அறிவுறுத்தினர்.தமிழக சட்டப்பேரவையின் அரசு உறுதிமொழிக்குழு, நேற்று கோவையில் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர். எம்.எல்.ஏ., வேல்முருகன் தலைமையிலான இக்குழுவினர், நேற்று மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சுவாமி தரிசனம் செய்த பின், கோவிலில் பக்தர்களின் வசதிக்காக, கட்டப்பட்டு வரும் 'லிப்ட்' அமைக்கும் பணியை பார்வையிட்டனர். பணியின் மதிப்பீடு, பணியின் கால அவகாசம், அதில் உள்ள அம்சங்கள் குறித்து கோவில் நிர்வாகத்திடம் கேட்டறிந்தனர். அதன்பின், பணியை உரிய காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும், உறுதி தன்மை, பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு பணி மேற்கொள்ள வேண்டும் என்றனர். தொடர்ந்து, பாரதியார் பல்கலையில், தேசிய உயர்கல்வி திட்டத்தில், 'காஸ் குரோமடோகிராபி மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி' ஆய்விற்கு, 1.5 கோடி ரூபாய் மதிப்பிலும், அடுத்த தலைமுறைக்கு பரம்பரை நோய்கள் வருவதை கண்டறியும் ஆய்விற்கு, 2.5 கோடி ரூபாய் மதிப்பிலும் புதியதாக வாங்கப்பட்டுள்ள கருவிகளை பார்வையிட்டனர். தொடர்ந்து, பாரதியார் பல்கலைக்கு நிலம் வழங்கியவர்களுக்கான இழப்பீட்டு தொகை வழங்கும் விவகாரம், எந்த நிலையில் உள்ளது என விசாரித்தார். அதனை விரைந்து வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க, பல்கலை., நிர்வாகத்தினரிடம் அறிவுறுத்தினார். அரசு உறுதிமொழி குழு உறுப்பினர்கள், கலெக்டர் கிராந்தி குமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட வருவாய் அலுவலர் சர்மிளா மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ