மேலும் செய்திகள்
கீழடியில் விதை திருவிழா
29-Aug-2024
ஆனைமலை:'ஆனைமலையில், பாரம்பரிய நெல் ரகங்கள் தயார் நிலையில் உள்ளது. தேவைப்படும் விவசாயிகள், வேளாண் அலுவலகத்தை அணுகலாம்,' என, வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்தார்.ஆனைமலை வேளாண் உதவி இயக்குனர் விவேகானந்தன் அறிக்கை:முன்னோர்கள், நெல் சாகுபடியை மூன்று போகங்களும் மேற்கொண்டனர். இதற்கு பயிர் சுழற்சி முறை சாகுபடியை பின்பற்றினர். சமச்சீரான சத்துகள் உடைய தானியங்களால் உடல் உறுதி, ஆரோக்கியம், உடல் உழைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தினர்.ஒரே பயிர் சாகுபடி செய்வதை தவிர்த்தனர்; மழையளவு, வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம், காற்றின் வேகம் போன்ற புறக்காரணிகள் வேளாண் பயிர்களின் உற்பத்தியை தீர்மானிப்பவை என்பதில் நம்பிக்கை வைத்தனர்.நெல் ரகங்களில் உயர் விளைச்சல் ரகங்களான, சன்ன ரகம் கோ 51, கோ43, குண்டுரகம் ஏடிடி 37, ஏஎஸ்டி 16 போன்றவை அதிக நீர் தேவை, ரசாயன உரங்கள் அளிக்கப்பட்டதுடன், 30 ஆண்டுகள் முன்னர் வரை ஏக்கருக்கு, 40 மூட்டைகள் மகசூல் கிடைத்தன. அவை தற்போது, 25 மூட்டைகள் மட்டுமே விளைச்சல் கிடைக்கின்றன.இதற்கு காரணம், மண்ணில் உள்ள சத்துக்களை பயிருக்கு எடுத்துக்கொடுக்கும், தொழுஉரம் பயன்பாடு குறைந்து விட்டது.இதனாலேயே மத்திய, மாநில அரசுகள், இயற்கை வேளாண் இடு பொருட்களை, விவசாயிகளே பண்ணையில் தயாரிக்க ஏதுவாக மர வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, மண்புழு உரம் தயாரித்தல், தேனீ வளர்ப்பு, பசுந்தாள் உர பயிர்கள் (தக்கை பூண்டு சணப்பை) பயிரிடுதல், தீவனப்பயிர்கள், துவரை போன்ற பலவகை பயிர்களை பயிரிடுதல், எள், நிலக்கடலை போன்ற மானாவாரி எண்ணெய் வித்து பயிர்கள் பயிரிடுதலை பரிந்துரை செய்கிறது.பாரம்பரிய நெல் ரகங்களான கருப்பு கவுளி, துாயமல்லி ஆகியவை பயிரிடும் போது விளைச்சல் ஏக்கருக்கு, 15 மூட்டைகள் என்ற அளவிலேயே வாய்ப்புள்ளது. எனினும், தற்போது ரகங்களில் அதிகப்படியான நுகர்வோர்கள் பாரம்பரிய நெல் ரகங்களை விரும்பி சாப்பிடுவதால், இவற்றுக்கு தற்போது தனி சந்தை உருவாகி வருகிறது.இத்தகைய பாரம்பரிய ரகங்களுக்கு எவ்விதமான பயிர் பாதுகாப்பு முறைகளோ, நீர்தேவையோ இல்லாததால், இடு பொருட்களுக்கான முதலீடு பெரும்பாலும் இல்லை என்ற நிலையில், புதுக்கோட்டையில் உள்ள இயற்கை விவசாய உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், விவசாயிகளிடம் கிலோ, 80 ரூபாய்க்கு கொள்முதல் விலை நிர்ணயித்து அவர்களே நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர்.இத்தகைய பாரம்பரிய நெல் ரகங்கள், வறட்சி, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் பயிர்கள் காய்ந்து விடாமலும், தானியங்கள் நிலத்தில் உதிர்ந்து விடாமலும் வளரும் சிறப்பு தன்மையுடையவையாகும்.ஆனைமலை வேளாண் விரிவாக்க மையத்தில், 130 நாட்கள் அறுவடை காலமுள்ள துாயமல்லி, 90 கிலோவும்; 150 நாட்கள் அறுவடை காலமுள்ள கருப்பு கவுளி, 300 கிலோவும், விவசாயிகளுக்கு சம்பா பருவத்தில் வினியோகம் செய்ய தயார் நிலையில் உள்ளது.தேவைப்படும் விவசாயிகள், ஆனைமலை வேளாண் விரிவாக்க மைய அலுவலகத்தில் பெற்று விதைத்து பயனடையலாம்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
29-Aug-2024