உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பைக், மொபைல் போன் திருடி ஆன்லைனில் விற்பனை ;கொள்ளையர்கள் இருவர் கைது

பைக், மொபைல் போன் திருடி ஆன்லைனில் விற்பனை ;கொள்ளையர்கள் இருவர் கைது

கோவை:பைக், மொபைல் போன்களை திருடி, குறைந்த விலைக்கு ஆன்லைனில் விற்பனை செய்து வந்த கொள்ளையர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.கோவை, உக்கடம் புல்லுக்காடு பகுதியை சேர்ந்தவர் நிவேதா, 25; தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன், புல்லுக்காடு பகுதியில் மொபைல் போனில், பேசிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த இருவர், அவரது மொபைல் போனை பறித்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து நிவேதா கடைவீதி போலீசில் புகார் அளித்தார்.அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி., காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் பதிவாகியிருந்த கொள்ளையர்களின் பைக் திருட்டு பைக் என்பது தெரிந்தது. இதையடுத்து, தெற்கு துணை கமிஷனர் சரவணக்குமார் தலைமையில் தனிப்படை எஸ்.ஐ.,க்கள் மாரிமுத்து, உமா மற்றும் போலீசார், அவர்களது உருவப்படத்தை வைத்து திருடர்களை தேடி வந்தனர்.நிவேதாவின் மொபைல் போனை டிராக் செய்தபோது அது கடைவீதி பகுதியை காட்டியது. உடனே போலீசார் கடைவீதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது பைக்கில் வந்த இருவரும் பிடிபட்டனர்.போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரித்ததில் அவர்கள் தெலுங்கு பாளையத்தை சேர்ந்த ராம்குமார், 29 மற்றும் செல்வபுரத்தை சேர்ந்த சரவணன், 33 என்பது தெரிந்தது.இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:ராம்குமார் மற்றும் சரவணன் மீது மாநகர போலீஸ் ஸ்டேஷன்களில், திருட்டு, வழிப்பறி உட்பட, 18 வழக்குகள் உள்ளன. ஒரு வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டு, ஆறு மாதங்களுக்கு முன் தான், ஜாமினில் வெளி வந்துள்ளனர். அதன் பின் மீண்டும் திருட்டில் ஈடுபட துவங்கி உள்ளனர். அவர்கள் திருடும் மொபைல் போன், பைக்குகளை ஆன்லைனில் 'ஆப்' வாயிலாக குறைந்த விலைக்கு விற்றுள்ளனர்.அவர்களிடம் இருந்து தற்போது, ஐந்து பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மற்ற பைக்குகளை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ராம்குமார் மீது போக்சோ வழக்கும் உள்ளது. அந்த வழக்கிற்காகவும் பணத்தை செலவு செய்து வந்துள்ளார். இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை