உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / துார்வாரப்படாத சாக்கடை; கடைகளுக்குள் தேங்கும் கழிவுநீர்

துார்வாரப்படாத சாக்கடை; கடைகளுக்குள் தேங்கும் கழிவுநீர்

கால்வாய் அடைப்பு

ஆனைமலை ஒன்றியம், சோமந்துறை ஊராட்சிக்கு உட்பட்ட, 2வது வார்டு, தெற்கு வீதி சாக்கடை கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, மக்கள் நலன் கருதி ஊராட்சி நிர்வாகம் இப்பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- -ரமேஷ்குமார், சோமந்துறை.

சாக்கடை சுத்தமில்லை

பொள்ளாச்சி நகராட்சி, 26வது வார்டு, காந்தி மண்டபம் வீதியில் உள்ள சாக்கடை கால்வாய், பல மாதங்களாக சுத்தம் செய்யாமல் இருப்பதால், கழிவு நீர் அப்பகுதி கடைகளுக்குள் செல்கிறது. இதனால், கடைவீதியில் உள்ள வணிகர்கள் அவப்படுகின்றனர். நகராட்சி நிர்வாகம் கழிவு நீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.-- -பழனிகுமார், பொள்ளாச்சி.

ரோட்டில் மழைநீர்

கிணத்துக்கடவுக்கு உட்பட்ட பல கிராம ரோடுகளில், மழை நீர் தேக்கம் அடைந்து உள்ளது. இதனால், வாகன ஓட்டுநர்கள் ரோட்டில் பயணிக்க சிரமப்படுகின்றனர். எனவே, வாகன ஓட்டுனர்கள் நலன் கருதி ரோட்டில் தேங்கியிருக்கும் மழை நீர் வடிந்து செல்லும் வகையில் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்.-- -தர்மராஜ், கிணத்துக்கடவு.

வீணாகும் தண்ணீர்

கிணத்துக்கடவு, போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள பொதுக்கிணற்றில் இருந்து குழாய் வாயிலாக தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. குழாயில் கசிவு ஏற்பட்டு உள்ளதால், தண்ணீர் வீணாகி ரோட்டில் வழிந்தோடுகிறது. இதை பேரூராட்சி நிர்வாகம் ஆய்வு செய்து, குழாயில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சீரமைக்க வேண்டும்.- -பாலு, கிணத்துக்கடவு.

பராமரிப்பு இல்லை

உடுமலை பஸ் ஸ்டாண்ட் எதிரில், நகராட்சி நினைவு ஸ்துாபி உள்ளது. அங்கு பராமரிப்பின்றி குப்பை, தேவையற்ற பொருட்கள் காணப்படுகிறது. இதனால், அப்பகுதி பொலிவிழந்துள்ளது. அதை நகராட்சியினர் பராமரித்து பொலிவாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சுரேஷ், உடுமலை.

வெள்ளை கோடுகளால் அவதி

பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் உள்ள அனைத்து நெடுஞ்சாலைகளிலும், வெள்ளை நிற பட்டை கோடுகள் மிக தடிமனாக அமைக்கப்பட்டுள்ளது. ஒரே இடத்தில், ஆறு வரிகளில் தடிமனான பட்டை உள்ளதால், இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் குலுங்கி, விபத்துக்கு உள்ளாகின்றன. வாகனத்தை ஓட்டி செல்வோருக்கு உடல்ரீதியாக பல்வேறு பிரச்னை ஏற்படுகிறது. பயனற்ற வெள்ளை பட்டைகளை நெடுஞ்சாலைத்துறையினர் அப்புறப்படுத்த வேண்டும்.- அசோக், பொள்ளாச்சி.

விதிமீறும் வாகனங்கள்

உடுமலை, தாராபுரம் ரோட்டில், சிவசக்தி காலனி அருகே வாகனங்கள் தாறுமாறாக ரோட்டை கடக்கின்றன. இதனால் எதிர்புறம் செல்லும் வாகன ஓட்டுநர்கள் கவனமில்லாமல் தடுமாறி விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. மேலும், உடுமலையை நோக்கி வருவோர் விதிமுறை பின்பற்றாமல் வளைவில் திரும்புவதால், பின்வரும் வாகனங்களுக்கு சிக்கலாகிறது.- செல்வி, உடுமலை.

கால்வாயை துார்வாரணும்!

உடுமலை ராஜலட்சுமிநகர் செல்லும் ரோட்டில், மழைநீர் கால்வாய் துார்வாரப்படாததால், குப்பை, மர இலைகள் நிறைந்து காணப்படுகிறது. இதனால், மழை பெய்யும் போது தண்ணீர் செல்ல முடியாமல் அடைத்துக்கொள்கிறது. எனவே, கால்வாயை துார்வார நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கார்த்திக், உடுமலை.

ஒளிராத தெருவிளக்குகள்

உடுமலை, காந்திசவுக் பகுதியில் தெருவிளக்குகள் சரியாக எரியாமல் இருக்கின்றன. இரவு நேரங்களில் குடியிருப்புகளில் மிகவும் இருள் சூழந்திருக்கிறது. பொதுமக்கள் திருட்டு பயத்துடன் செல்ல வேண்டியுள்ளது. தெருவிளக்குகளை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சரவணன், உடுமலை.

குப்பைக்கு தீ வைப்பு

உடுமலை, பிரசன்ன விநாயகர் கோவில் ரோட்டில் குப்பைக்கழிவுகள் தீ வைத்து எரிக்கப்படுகிறது. குப்பைக்கழிவுகளிலிருந்து பரவும் புகையால் வாகன ஓட்டுநர்களும் அவதிப்படுகின்றனர். மேலும்,காற்று அதிகமாக வீசுவதால், கழிவுகளிலிருந்து பரவும் புகையால் தீ விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.- விஸ்வநாதன், உடுமலை.

போக்குவரத்து நெரிசல்

உடுமலை, தளி ரோட்டில் வாகனங்கள் விதிமுறை மீறி நிறுத்தப்படுகிறது. பார்க்கிங் வசதி இல்லாத இடங்களிலும் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. இதனால் மாலை நேரங்களில் அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.- காயத்ரி, உடுமலை.

ரோட்டோரத்தில் குப்பை

பொள்ளாச்சி அரசு மருத்துவமனை பின் பகுதியில், பாலகோபாலபுரம் வீதியில் அதிக அளவு குப்பை ரோட்டோரத்தில் உள்ளது. இதனால், அப்பகுதியில் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. குப்பையை அகற்றி துாய்மையாக பராமரிக்க நகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும்.-- -பாலாஜி, பொள்ளாச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ