உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பா.ஜ., அரசு பாகுபாடு காட்டுவதில்லை: முதல்வருக்கு வானதி சீனிவாசன் பதில்

பா.ஜ., அரசு பாகுபாடு காட்டுவதில்லை: முதல்வருக்கு வானதி சீனிவாசன் பதில்

கோவை;மத்திய பா.ஜ., அரசு அனைத்து மாநிலங்களையும் சமமாகவே நடத்துகிறது என, எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழகத்தில் தொடர் தோல்வி, படு தோல்வி அடைந்த பிறகும், மத்திய அரசு அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை. தமிழகத்துக்கு நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு மனமில்லை, என முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.அவர் முதல்வராகி மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. மூன்று ஆண்டுகளும் மத்திய அரசை குறைகூறிக் கொண்டிருக்கிறார். 10 ஆண்டு கால பா.ஜ., ஆட்சியில் தமிழகத்தில் நெடுஞ்சாலைகள், விரைவுச் சாலைகள், மேம்பாலங்கள், மெட்ரோ ரயில் திட்டங்கள், மருத்துவக் கல்லூரிகள், புதிய ரயில்கள் என, உள்கட்டமைப்பில் எப்போதும் இல்லாத அளவுக்கு வளர்ந்துள்ளது.கோவை விமான நிலைய விரிவாக்கம், சென்னை புதிய விமான நிலையம் உள்ளிட்ட திட்டங்கள் மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் நிறைவேற்றப்படவில்லை.மத்திய பா.ஜ., அரசு அனைத்து மாநிலங்களையும் சமமாகவே நடத்துகிறது; பாகுபாடு காட்டவில்லை. மத்திய நிதி ஆணையத்தின் பரிந்துரையின் பேரிலேயே, மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது.ஜி.எஸ்.டி., வரியிலும், சமமான பங்கீடு அளிக்கப்படுகிறது. தேர்தலில், எதிர்க்கட்சிகள் பிளவுபட்டு நின்றதால் தி.மு.க., வென்றுவிட்டது.கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்திலேயே தி.மு.க., அரசின் லட்சணம் தெரிந்துவிட்டது. பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தினால், சட்டம் ஒழுங்கு தி.மு.க., அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதும் தெரிந்துவிட்டது.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ