உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விரிவாக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் கட்டணம் உயருகிறது

விரிவாக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் கட்டணம் உயருகிறது

கோவை : கோவை மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்களுக்காக, சிறுவாணி, பில்லுார் அணைகள், ஆழியாறு, பவானி ஆறுகளில் இருந்து குடிநீர் எடுத்து வினியோகிக்கப்படுகிறது. நாளொன்றுக்கு, 44.77 கோடி லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. தேவையான அளவு குடிநீர் தருவித்து, மக்களுக்கு சப்ளை செய்வதற்காக, ஆறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.இதற்காக, 553.51 கோடி ரூபாய் மாநகராட்சி கடன் வாங்கியிருக்கிறது; 125.26 கோடி வட்டி செலுத்த வேண்டியுள்ளது. இவ்வகையில் மட்டும், ரூ.678.77 கோடி மாநகராட்சிக்கு கடன் நிலுவை இருக்கிறது.மாநகராட்சி விரிவாக்கத்துக்கு முன்பிருந்த, 60 வார்டு பகுதியில், 24 மணி நேர குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இப்பகுதியில், 2013ல் நிர்ணயித்த கட்டணம் நடைமுறையில் உள்ளது. மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட, 11 உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர் கட்டணம் திருத்தியமைக்கப்படவில்லை. அதனால், கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.அதனால், விளாங்குறிச்சி, காளப்பட்டி, கவுண்டம்பாளையம், வீரகேரளம், வடவள்ளி, குறிச்சி, குனியமுத்துார், துடியலுார், சின்ன வேடம்பட்டி, சரவணம்பட்டி, வெள்ளக்கிணறு ஆகிய பகுதிகளில் வசிப்போருக்கு குடிநீர் கட்டணம் உயர்த்தப்படுகிறது. வீட்டு இணைப்புகளுக்கு மாதாந்திர கட்டணம் ரூ.100, வீட்டு இணைப்பு (பல்க் கனெக்சன் - 20 மி.மீ., விட்டத்துக்கு அதிகமுள்ள குழாய் இணைப்பு) ரூ.900, வீட்டு உபயோகம் இல்லாத இணைப்புக்கு ரூ.525, வீட்டு உபயோகம் இல்லாத மொத்த வினியோக முறை (20 மி.மீ., விட்டத்துக்கு அதிகமுள்ள குழாய் இணைப்பு) ரூ.1,350 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கான தீர்மானம், கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில் இன்று (26ம் தேதி) நடைபெறும் மாமன்ற கூட்டத்தில், கவுன்சிலர்களின் பார்வைக்காக மட்டும் பதிவு செய்யப்படுகிறது. கூட்டம் முடிந்ததும் குடிநீர் கட்டண உயர்வு அமலுக்கு கொண்டு வரப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Srinivasan Rajagopal
ஜூலை 26, 2024 10:24

மேலே குறிப்பிட்ட தினமலர் செய்தியில் விளாங்குறிச்சி பஞ்சாயத்திலிருந்து கார்ப்பரேஷனாக திருத்தி அமைத்த பின் குடிநீர் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்பது தவறான தகவல். பஞ்சாயத்தில் மாதம் ₹30 ஆக இருந்த கட்டணம் ₹60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.தற்போது மாதக்கட்டணம் ₹100 ஆக உயர்த்தப்பட உள்ளது. ஆனால் மாதம் ₹30 ஆக இருந்த போது நான்கு நாட்கள் இடைவெளியில் 2 மணி நேரம் வந்த குடிநீர் மாதம்₹60ஆக மாறியபின் எட்டு நாட்கள் இடைவெளியில் 3 மணி நேரம் மட்டுமே வருகிறது. இனி மாதம் ₹100 ஆக்கினால் 15 நாள் இடைவெளியில் குடிநீர் தரப்படுமோ? வாழ்க கார்ப்பரேஷன் மயமாக்கல்


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை