சூலுார்;சூலுார் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் நீர் நிலைகள் மற்றும் கல் குவாரிகள் அருகே தடுப்புகளோ, எச்சரிக்கை பலகைகளோ வைக்கப்படாததால், அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக புகார் எழுந்துள்ளது. சூலுார் சுற்று வட்டார பகுதிகளான கண்ணம்பாளையம், பள்ளபாளையம், இருகூர் மற்றும் பாப்பம்பட்டி, கள்ளப் பாளையம், சின்னிகுயிலி, பெரிய குயிலி பகுதிகளில் ஏராளமான குளம், குட்டைகள் மற்றும் பயன்பாட்டில் இல்லாத கல் குவாரிகள் உள்ளன. சூலுார், கண்ணம்பாளையம், பள்ளபாளையம், இருகூர் குளங்களில் தண்ணீர் அதிகளவில் உள்ளது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், சிறுவர்கள் பொழுதை போக்க, நீர்நிலைகளை தேடி வருவது அதிகரித்துள்ளது. பெரும்பாலும் வெளியிடங்களில் இருந்து வரும் சிறுவர்கள், நீரை கண்டதும் குளத்தில் இறங்குகின்றனர். ஆர்வத்தில் ஆழமான பகுதிக்கு சென்று, நீச்சல் தெரியாமல் சேற்றில் சிக்கி உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. சில நாட்களுக்கு முன் தொண்டாமுத்தூர் பகுதியில், தடுப்பணையில் குளிக்க சென்ற மூன்று சிறுவர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன், சூலுார் சிறிய குளத்தில் இறங்கிய மூன்று சிறுவர்கள் சேற்றில் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. அதன்பின், சூலுாரில் உள்ள இரு குளங்களுக்கும் கம்பி வேலி அமைக்கப்பட்டு, எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகள் கண்டு கொள்ளுமா:
தொண்டாமுத்தூர் சம்பவத்துக்கு பிறகு, 'நீர்நிலைகளுக்கு அருகில் எச்சரிக்கை செய்யும் அறிவிப்பு பலகைகளை உள்ளாட்சி அமைப்புகள் உடனடியாக வைக்கவேண்டும். அசம்பாவிதங்கள் நடக்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், என, கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். ஆனால், உள்ளாட்சி அமைப்புகள் உத்தரவை நடமுறைப்படுத்தாமல் உள்ளன. கண்ணம்பாளையம், பள்ளபாளையம், இருகூர் பேருராட்சிகளில் உள்ள நீர்நிலைகளுக்கு அருகில் எந்தவொரு அறிவிப்பு பலகையும் வைக்கப்படவில்லை. அதேபோல், கல்குவாரிகள் உள்ள ஊராட்சிகளிலும் எந்த எச்சரிக்கை பலகையும் இதுவரை வைக்கப்படவில்லை. அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க, உள்ளாட்சி அமைப்புகள் உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதேபோல், பெற்றோரும் விடுமுறை காலத்தில் தங்கள் குழந்தைகளை தீவிர கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டியது அவசியம்.