பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகரில், திரும்பும் இடமெல்லாம், மூட்டை மூட்டையாக கழிவு தேங்கி கிடப்பதால், சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.பொள்ளாச்சி நகராட்சியில், 36 வார்டுகளில், 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மேலும், வணிக வளாகங்கள் அதிகளவு நிறைந்து, வளர்ந்து வரும் நகரமாக உள்ளது.நகராட்சி நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில், 300க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்களை கொண்டு, கடந்த சில ஆண்டுகள் வரை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.இந்நிலையில், அரசு உத்தரவுப்படி துாய்மை பணியாளர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டன. தற்போது, நகராட்சியில், 69 நிரந்தர துாய்மை பணியாளர்கள், 143 ஒப்பந்த துாய்மை பணியாளர்கள், இரண்டு ஒப்பந்ததாரர்கள் வாயிலாக குப்பை சேகரிக்கின்றனர். பணிகள் பிரிப்பு
குப்பை சேகரிக்க, பேட்டரி ஆட்டோ மாதிரியான வாகனங்கள், சரக்கு வாகனங்கள் (மினி லாரி), டிப்பர் லாரிகளை கொண்டு குப்பை சேகரிக்கப்படுகிறது. குப்பை சேகரிப்பு பணிகள், தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. குடியிருப்பு பகுதிகளில், குப்பை சேகரித்து தரம் பிரித்து வழங்கும் பணியும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.நகராட்சி நிரந்தர துாய்மை பணியாளர்கள், பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளிலும், குடியிருப்பு பகுதிகளில் சாக்கடை கால்வாய் துார்வாருதல், புதர்களை வெட்டுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதாக, நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.ஆனால், நகரில் சாக்கடை துார்வாருதல், சாக்கடை கால்வாய் துாய்மைப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மந்தமாக நடக்கின்றன. தினமும் 30 டன்!
நகராட்சி பகுதியில், ஒரு நாளுக்கு, ஒன்பது டன் பிளாஸ்டிக் கழிவுகள் உள்பட,30 டன்னுக்கும் அதிகமாக கழிவுகள் சேகரமாகின்றன. அதில், தனியார் வாயிலாக, 22.75 டன் குப்பை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, நகரில் தேங்கும் குப்பையை அவர்கள் வாயிலாக எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், நகரில் திரும்பும் இடங்கள் எல்லாம் குப்பை மயமாக உள்ளது. சாக்கடை கால்வாய்களிலும், ரோட்டோரங்களிலும் பரவி கிடக்கின்றன.நகரமெங்கும் திறந்த வெளியில் கிடக்கும் குப்பை கழிவுகளில் உணவு தேடும் கால்நடைகளின் உடல் நலம் பாதிக்கப்படுவது தொடர்கிறது. திறந்தவெளியில் தேங்கும் கழிவுகளால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. துாய்மையில்லை
பாலகோபாலபுரம் வீதி, நேதாஜி ரோடு, பல்லடம் ரோடு, மார்க்கெட் ரோடு மற்றும் நியூஸ்கீம் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகள் அருகே என, நகரின் பல இடங்களில் மூட்டை மூட்டையாக குப்பை கழிவுகள் தேக்கமடைந்து கிடக்கின்றன. இதற்கு ஒரு விடிவு கிடைக்காத சூழல் உள்ளது.ஒரு சில இடங்களில் கழிவுகளை அள்ளாமல் அப்படியே தீ வைத்து எரிப்பதால் காற்று மாசடைவதுடன், வாகனங்களில் செல்வோர் சிரமப்படும் சூழலும் உள்ளது.குப்பை முறையாக அள்ளப்படுவதாக கூறினாலும், ஏன் நகரம் துாய்மையின்றி காணப்படுகிறது என்பதை அதிகாரிகள் தான் விளக்க வேண்டும். புதர் சூழ்ந்தது
நகரில் உள்ள பெரும்பாலான சாக்கடை கால்வாய்கள்அடைத்துள்ளதுடன், புதர் மண்டி காணப்படுகின்றன. முறையாக சுத்தம் செய்யாமல் உள்ளதால், கொசுத்தொல்லை, பூச்சிகளின் தொல்லையால் மக்கள் சிரமப்படுவது வாடிக்கையாக உள்ளது.கால்வாய்கள் துார்வாரமல் உள்ளதால், மழைக்காலங்களில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து ரோட்டில் வெள்ளமாக ஓடுவதுடன், கழிவுகள் அனைத்தும் ரோட்டில் தேங்குகின்றன.ஒரு சில இடங்களில் கால்வாய்களில் இருந்து கழிவுகளை எடுத்து, ரோட்டில் குவித்து வைக்கின்றனர். அந்த கழிவுகளை மாதக்கணக்கில் அப்புறப்படுத்தாமல் விடுவதால், மீண்டும் கால்வாயில் சரிந்து அடைப்பு ஏற்படுத்துகிறது.நகராட்சியில் நிலவும் திடக்கழிவு பிரச்னைக்கு தீர்வு காணாமல், மக்கள் நலனில் அக்கறையின்றி, அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகள் உள்ளனர்.
துாய்மைக்கு ஏங்கும் மக்கள்!
பொள்ளாச்சி நகரில், குப்பை தேக்கம், சாக்கடை கால்வாய்கள் துார்வாராமல் கிடப்பதால், சுகாதாரமின்றி நகரம் காட்சியளிக்கிறது. இது குறித்து புகார் தெரிவித்தாலும், நடவடிக்கை இல்லை. நகரமே, துாய்மைக்கு ஏங்கி நிற்கும் நிலை தான் காணப்படுகிறது.மக்கள் கூறியதாவது:பொள்ளாச்சியில் துாய்மை பணிகள் மந்தமாக நடக்கின்றன. எங்கும் குப்பை மயமாக உள்ளதால், 'துாய்மை என்ன விலை' என கேட்கும் நிலையே உள்ளது.நகரில் அடிப்படை பிரச்னைகளுக்கு கூட செவி சாய்க்காமல் இருப்பது வேதனையான விஷயமாக உள்ளது. இதுகுறித்து, சமீபத்தில் பொள்ளாச்சி எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டருக்கு புகார் கடிதம் அனுப்பினார். அதன்பின், குப்பை அகற்றப்பட்டது.தற்போது, மீண்டும் ஆங்காங்கே தேங்கி கிடக்கும் கழிவுகளால் நகரமே அலங்கோலமாக உள்ளது. இனியாவது, அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் சுகாதாரம் காக்க முன்வர வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.