உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எப்ப தான் பயன்பாட்டுக்கு வரும் அத்திக்கடவு திட்ட ஆர்வலர்கள் சோகம்

எப்ப தான் பயன்பாட்டுக்கு வரும் அத்திக்கடவு திட்ட ஆர்வலர்கள் சோகம்

அன்னுார்;அத்திக்கடவு திட்டம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர்.கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், 1045 குளம், குட்டைகளில் நீர் நிரப்பும் அத்திக்கடவு அவிநாசி திட்ட பணிகள் 1,745 கோடி ரூபாய் செலவில் முடிக்கப்பட்டது. பணி முடிந்து 15 மாதங்கள் ஆகி விட்டது. சோதனை ஓட்டம் கடந்த 2023 ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. ஆனால் இத்திட்டம் இது வரை செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. இதுகுறித்து அன்னுார் மக்கள் கூறியதாவது : கொங்கு மண்டலத்தில் நிலத்தடி நீர் மட்டம் 1,000 அடிக்கு கீழ் சென்று விட்டது. விவசாய பரப்பளவு குறைந்து வருகிறது. மேய்ச்சலுக்கு நிலம் இல்லாமல் கால்நடை வளர்ப்பும் குறைந்து விட்டது. புறநகரில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் கோவை, திருப்பூர் நகரங்களுக்கு செல்கின்றனர். இதற்கு தீர்வாக பவானி ஆற்றில் இருந்து மூன்று மாவட்டங்களில் உள்ள குளம், குட்டைகளில் நீர் நிரப்பும் அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற கோரி இப்பகுதி மக்கள் 60 ஆண்டுகளாக போராட்டம் நடத்தினர். 2019ல் பணி துவங்கியது. ஆறு நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டு விட்டன. பிரதான குழாய் மற்றும் கிளை குழாய்கள் பதிக்கப்பட்டு விட்டன. சோதனை ஓட்டம் துவங்கி 15 மாதங்கள் முடிந்து விட்டது. இதுகுறித்து அமைச்சர் முத்துசாமி, நீலகிரி எம்.பி., ராஜா ஆகியோரிடம் கேட்டபோது, 'பவானி ஆற்றில் தண்ணீர் குறைவாக உள்ளது. தண்ணீர் வரத்து அதிகரித்தவுடன் திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்,' என தெரிவித்தனர்.தற்போது பவானி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. ஆனாலும் திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. மூன்று மாவட்ட மக்களின் 60 ஆண்டு கால கனவு. இத்திட்டத்திற்கு அ.தி.மு.க., ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டது. அப்போதே 85 சதவீத பணிகள் முடிக்கப்பட்டு விட்டன. முந்தைய ஆட்சியில் துவக்கப்பட்ட பணி என்பதால் தி.மு.க., அரசு இத்திட்டத்தை முடக்கி வைத்துள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. முதல்வர் இத்திட்டத்தை உடனே செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். விடுபட்ட 900 குளங்களுக்கான அத்திக்கடவு இரண்டாவது திட்ட பணிகளை விரைவில் துவக்க வேண்டும். இவ்வாறு அன்னுார் மக்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை