கோவை;'பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தாக்கல் செய்த வேட்பு மனுவுடன் இணைத்திருந்த பிரமாண பத்திரம் ஏற்புடையதல்ல' என, அ.தி.மு.க., வக்கீல் கோபாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.அ.தி.மு.க., வக்கீல் கோபாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:'நான் ஜூடிசியல் ஸ்டாம்ப்' பேப்பருக்கு பதிலாக, 'கோர்ட் பீ ஸ்டாம்ப்' பேப்பரில், பிரமாண பத்திரத்தை, அண்ணாமலை தாக்கல் செய்திருந்தார்.வேட்பு மனு தாக்கல் செய்த நாளன்றே, தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்; இது தான் நடைமுறை.பா.ஜ., சார்பில் மொத்தம் மூன்று மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். ஒரே ஒரு வேட்பு மனுவுடன் மட்டும், 200 ரூபாய்க்கான 'கோர்ட் பீ' பேப்பரில் பிரமாண பத்திரம் இணைக்கப்பட்டு, இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது.இன்று (நேற்று) மாலை 5:00 மணிக்கு கலெக்டரின் மேஜையில், ரூ.100 மதிப்பிலான 'நான் ஜூடிசியல் ஸ்டாம்ப்' பேப்பர் பிரமாண பத்திரம் இருந்தது. அதை, மாலை, 5:17க்கு பதிவேற்றம் செய்திருக்கின்றனர். இது, அப்பட்டமான விதிமீறல்.எங்களுடன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இருக்கிறார்; தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். பரிசீலனை முடிந்து விட்டது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. திருத்திய பிரமாண பத்திரம் தருவதாக இருந்தாலும், 'செக் லிஸ்ட்' கொடுத்திருக்க வேண்டும்.அதன்படி, புது மனு அவர்கள் கொடுக்கவில்லை. அவ்வாறு கொடுத்திருந்தாலும், பரிசீலனை துவங்கிய நேரமான, 11:00 மணிக்கு முன் வழங்கியிருக்க வேண்டும். இப்போது, பதிவேற்றம் செய்கிறார்கள் என்றால், விதிமீறல் செய்கிறார்கள் என்றே அர்த்தம்.இவ்வாறு, அவர் கூறினார்.இதுதொடர்பாக, தேர்தல் பிரிவினரிடம் விளக்கம் கேட்டதற்கு, 'அண்ணாமலை இரண்டு வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். வரிசை எண்: 17ல், 'கோர்ட் பீ' ஸ்டாம்ப் பேப்பரில் பிரமாண பத்திரம் இணைக்கப்பட்டு இருந்தது. வரிசை எண்: 27ல் 'நான் ஜூடிசியல் ஸ்டாம்ப்' பேப்பரில் பிரமாண பத்திரம் கொடுக்கப்பட்டது. வரிசை எண்: 17 நிராகரிக்கப்பட்டது; 27 மட்டும் ஏற்கப்பட்டது. ஆனால், இணையத்தில் பதிவேற்றம் செய்தபோது, தவறுதலாக, 'கோர்ட் பீ' ஸ்டாம்ப் பேப்பரில் வழங்கிய பிரமாண பத்திரத்தை இணைத்து விட்டனர். தவறு சுட்டிக்காட்டப்பட்டதும், அப்பதிவு அகற்றப்பட்டு, 'நான் ஜூடிசியல் ஸ்டாம்ப்' பேப்பரில் வழங்கிய பிரமாண பத்திரம் பதிவேற்றப்பட்டது.இதில், விதிமீறல் இல்லை' என்றனர்.