உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வழக்கு முடிந்தும் வரி நிலுவை வைத்திருப்பதேன்! 7 நாட்கள் அவகாசம் வழங்கிய நகராட்சி

வழக்கு முடிந்தும் வரி நிலுவை வைத்திருப்பதேன்! 7 நாட்கள் அவகாசம் வழங்கிய நகராட்சி

பொள்ளாச்சி,; 'வழக்குகள் முடிவடைந்த நிலையில், 32 பேர் வரி செலுத்தாததால், 4 கோடியே, 96 லட்சம் ரூபாய் நிலுவையில் உள்ளது. ஏழு நாட்களுக்குள் வரி செலுத்தி முறைப்படுத்திக்கொள்ள இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது,' என, நகராட்சி கமிஷனர் கணேசன் தெரிவித்தார்.பொள்ளாச்சி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை வசூல் செய்ய, வார்டு வாரியாக அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வரி ஏய்ப்பு செய்துள்ள கட்டடங்கள் குறித்து, நகராட்சி கமிஷனர் கணேசன் தலைமையிலான குழுவினர், ஆய்வு செய்து, வரியை முறைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.பலமுறை தெரிவித்தும், வரி செலுத்தாமல் நிலுவை வைத்துள்ள கட்டடங்கள் ஜப்தி செய்வதற்காக அறிவிப்பு வைக்கப்படுகிறது. நகராட்சி அதிகாரிகள், 100 சதவீதம் வரி வசூலிக்க முனைப்பு காட்டி வருகின்றனர். வழக்கு முடிந்த நிலையிலும், வரி செலுத்தாமல் உள்ளோர் உடனடியாக வரியை முறைப்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும், என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நகராட்சி கமிஷனர் கூறியதாவது:நகரப்பகுதியில், தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்பு சட்டம் விதிகள், தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிமீறல்கள் அதிகளவு இருக்கும். அது போன்று, பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதகிளில், அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது அல்லது முறையாக வரி விதிக்கவில்லை போன்ற காரணங்களை கூறி, 32 வழக்குகள் போடப்பட்டன.பெரும்பான்மையான வழக்குகள் முடிக்கப்பட்ட நிலையில், அவர்கள் எவரும் வரிகளை முறைப்படுத்திக்கொண்டு வரி செலுத்த முன்வராமல், 4 கோடியே, 96 லட்சம் ரூபாய் நிலுவை வைத்துள்ளனர்.இவர்களில் பெரும்பான்மையானோர் உரிய கட்டணம் செலுத்தி கட்டட அனுமதி பெறாமல் கட்டட வதிகளுக்கு எதிராக கட்டியதாக தெரிகிறது. அத்துடன், வழக்கு நிலுவையில் இருக்கும் போதே, கூடுதல் கட்டடம் கட்டி வரி ஏய்ப்பு செய்து வருபவர்களாக உள்ளனர்.தொழில் உரிமம், தொழில் வரி, குடிநீர் கட்டணம் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு சேவை கட்டணம், குப்பை சேவை கட்டணம், என, நகராட்சிக்கு செலுத்த வேண்டிய எந்தவொரு கட்டணத்தையும் செலுத்தாமல் உண்மைகளை மறைத்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.இருப்பினும், ஏழு நாட்களுக்குள் நகராட்சி அலுவலகத்தை அணுகி முறைப்படுத்தி வரி செலுத்த இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை, 32 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.தற்போது, அனைத்து வழக்குகளும் விரிவாக ஆய்வு செய்து மனுதாரர்கள் நகராட்சி சட்ட விதிகளுக்கு எதிராக செயல்படுவதோடு, நகராட்சிக்கு செலுத்த வேண்டிய எந்தவொரு கட்டணமும் செலுத்தாமல், சொத்து வரி வழக்கு நிலுவையில் உள்ளது என்பதை காரணம் காட்டி, வரி ஏய்ப்பு செய்து வருவதோடு உண்மைகளை மறைத்து நீதிமன்றத்தை அவமதித்து உள்ளதாக தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர தீவிர பணிகள் நடைபெற்று வருகிறது.நகராட்சிக்கு சட்டபூர்வமாக செலுத்த வேண்டிய வரிகளை செலுத்தாமல், வரி ஏய்ப்பு செய்து வருவோர், முறையாக வரி செலுத்தும் பொதுமக்கள் பெற்று வரும் அனைத்து அடிப்படை வசதிகளையும் பெறுவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை