| ADDED : மே 06, 2024 12:25 AM
பெ.நா.பாளையம்;நரசிம்மநாயக்கன்பாளையத்தில் பட்டப்பகலில் பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.கோவை மாவட்டம், நரசிம்மநாயக்கன்பாளையம், பாலாஜி நகரில் வசிப்பவர் மனோகரன். இவரது மனைவி ரேணுகா, 40; தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று மதியம் மனோகரன், அவரது குழந்தைகள் வெளியே சென்று விட்டு மாலை, 3.50 மணிக்கு வீடு திரும்பினர். வீட்டுக்குள் சென்று பார்த்த போது, ரேணுகாதேவி தலை, முகம், கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.ரேணுகாவை வெட்டி கொலை செய்தது யார் என்பது தெரியவில்லை. அவரது கழுத்தில் கிடந்த மூன்று பவுன் தங்கச் செயின் காணவில்லை. தங்க செயினுக்காக வெட்டி கொலை செய்யப்பட்டாரா அல்லது கொலைக்கு வேறு காரணங்கள் உள்ளதா என்பது குறித்து, பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி., நமச்சிவாயம், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன், மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.சம்பவம் நடந்த வீட்டுக்கு அருகே இருந்த சி.சி.டிவி., கேமரா பதிவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், நேற்று மதியம், 2:00 மணிக்கு, ஒரு நபர் ரேணுகா வீட்டுக்கு பின்புறமாக காம்பவுண்ட் சுவர் ஏறி வந்து, ரேணுகா வீட்டுக்குள் நுழைவதும், ஏழு நிமிடங்களுக்கு பிறகு சுவர் ஏறி குதித்து, வந்த வழியாக திரும்பி சென்றதும் தெரியவந்தது.அந்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் நரசிம்மநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.