உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 108 ஏக்கர் கோவில் நிலங்கள் அளவீடு: எல்லை கற்கள் நடும் பணி தீவிரம்

108 ஏக்கர் கோவில் நிலங்கள் அளவீடு: எல்லை கற்கள் நடும் பணி தீவிரம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, கோவில்களுக்கு சொந்தமான, 108 ஏக்கர் நிலங்களை கண்டறிய வருவாய்துறை, ஹிந்துசமய அறநிலையத்துறை மற்றும் போலீசார் இணைந்து கூட்டு ஆய்வு செய்து எல்லை கற்களை நட்டினர். பொள்ளாச்சி அருகே, சின்ன நெகமத்தில், 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்றாயப்பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, 75 ஏக்கர் நிலம் உள்ளது.இந்த நிலத்தை, 26 பேர் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், நிலங்களை அளவீடு செய்ய திட்டமிட்ட போது, பல்வேறு காரணங்களினால் ஒத்தி வைக்கப்பட்டது.இதுபோன்று, நெகமம் வரதராஜப்பெருமாள் நெகமம் கருடராய பெருமாள் கோவில்களுக்கு சொந்தமான நிலங்களும் ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. நிலத்தை உரிய பாதுகாப்புடன் அளவீடு செய்ய வேண்டும், வருவாய்துறை, போலீசார் உரிய நாளை தேர்வு செய்து, நில அளவை பணிகளை முடிக்க வேண்டும் என,மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து, நேற்று ஹிந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் விஜயலட்சுமி, பொள்ளாச்சி ஏ.எஸ்.பி., சிருஷ்டி சிங், நெகமம் இன்ஸ்பெக்டர் முகமது ஜாபர், பொள்ளாச்சி தாசில்தார் வாசுதேவன், கோவை மாவட்ட கோவில் நிலங்கள் தனி தாசில்தார் பரமேஸ்வரி, நெகமம் உள்வட்ட ஆய்வாளர் பரமேஸ்வரி மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். வாக்குவாதம் கோவில் நிலங்களை அளவீடு செய்த அதிகாரிகளை தடுத்து, ஆக்கிரமிப்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கோர்ட்டில் வழக்கு உள்ள நிலையில், தகவல் தெரிவிக்காமல் அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் மட்டுமே அளவீடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், ஏ.எஸ்.பி. 'அரசு பணியை தடுக்க கூடாது. தடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்,' என எச்சரித்தார். இதையடுத்து அளவீடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, எல்லை கற்கள் நடப்பட்டது. ஹிந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'சின்னநெகமம் சென்றாய பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, 75 ஏக்கர், கருடராய பெருமாளுக்கு, 19 ஏக்கர், விக்னேஸ்வரர் கோவில், ஒன்பது ஏக்கர், கரிவரதராஜப்பெருமாள் கோவில், 5 ஏக்கர் என மொத்தம், 108 ஏக்கர் நிலங்கள் உள்ளன. தற்போது, அவை கண்டறியப்பட்டு அளவீடு செய்து நடுகற்கள் நடப்படுகின்றன. முதற்கட்டமாக நேற்று மட்டும், 60 ஏக்கர் அளவீடு செய்யப்பட்டுள்ளன. மேலும், 15 எல்லை கற்கள் நடப்பட்டன. தொடர்ந்து, அளவீடு பணிகள் மேற்கொள்ளப்படும்,' என்றனர்.

'தினமலர்' செய்தி எதிரொலி!

பொள்ளாச்சி அருகே, சின்னநெகமத்தில் சென்றாய பெருமாள் கோவில், வரதராஜப்பெருமாள் கோவில், கருடராய பெருமாள் கோவில்களின் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது தொடர்பாக, உரிய ஆவணங்களுடன், 'தினமலர்' நாளிதழில் செய்திகள் வெளியிடப்பட்டன. இதை தொடர்ந்து, ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. தற்போது, கோவில் நிலங்கள் கண்டறியப்பட்டு, எல்லை கற்கள் நடப்படுகின்றன. இதனால், ஆன்மிக பெரியோர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !