மாரத்தான் போட்டியில் 1,250 பேர் பங்கேற்பு
அன்னுார்; அன்னுாரில் நடந்த ஆரோக்கிய மாரத்தான் போட்டியில், 1,250 பேர் பங்கேற்றனர்.இந்திய மருத்துவர் சங்கத்தின் அன்னுார் கிளை, கோவை ஜி.கே.என்.எம். மருத்துவமனை மற்றும் அன்னுார் ரன்னர்ஸ் சார்பில், நான்காவது ஆண்டாக, மாரத்தான் போட்டி நேற்றுமுன்தினம் நடந்தது.ஸ்ரீ அம்பாள் துளசி பப்ளிக் பள்ளியில் காலை 6:00 மணிக்கு மாரத்தான் ஓட்டம் துவங்கியது. ஜி.கே.என்.எம்., மருத்துவமனை தலைமை செயல் அலுவலர் ரகுபதி வேலுசாமி ஓட்டத்தை துவக்கி வைத்தார்.10 கி.மீ., 21 கி.மீ., என 14 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண், இரு பாலருக்கும் எட்டு பிரிவுகளாக போட்டிகள் நடந்தன.கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 1,250 பேர் பங்கேற்றனர். 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் பலரும் இதில் பங்கேற்று ஆர்வமாக ஓடி அசத்தினர். ஒவ்வொரு பிரிவிலும், முதல் மூன்று இடங்களை பிடித்தோருக்கு ரொக்க பரிசு, கோப்பை மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. ஓட்டத்தை நிறைவு செய்த அனைவருக்கும் சான்றிதழும், பதக்கங்களும் வழங்கப்பட்டன. மொத்தம் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது.பரிசளிப்பு விழாவில், பள்ளித் தாளாளர் நந்தகுமார், ஆர்பிட் ஆசியா ஆய்வக நிர்வாக இயக்குனர் தரணி சுப்பிரமணியம், இன்ஸ்பெக்டர் செல்வன் மற்றும் இந்திய மருத்துவர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.