| ADDED : நவ 27, 2025 02:25 AM
அன்னூர்: மசக்கவுண்டன் செட்டிபாளையம், துணைமின் நிலையப் பகுதியில், 24 மணி நேர மும்முனை மின்சார வினியோகம் துவக்கி வைக்கப்பட்டது. கோவை வடக்கு மின் பகிர்மான வட்டத்தின் கீழ், 110 கே.வி. துணை மின் நிலையம் மசக்கவுண்டன் செட்டிபாளையத்தில் செயல்பட்டு வருகிறது. அன்னூர் மற்றும் சூலூர் தாலுகாவை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் மும்முனை மின்சாரம் தினமும் சில மணி நேரம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இப் பகுதியில் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் இணைய வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் மசக்கவுண்டன் செட்டிபாளையம் துணை மின் நிலையத்தில், ராயர் பாளையம் மின் பாதையில், மும்முனை மின்சார விநியோகம் துவக்கி வைக்கப்பட்டது. மின் வாரிய மேற்பார்வை பொறியாளர், செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பொன்னே கவுண்டன் புதூர், சுண்டமேடு, ராயர்பாளையம், செந்தாம் பாளையம் உள்ளிட்ட 30 கிராமங்கள் இதனால் பயனடையும். இந்நிகழ்ச்சியில் விவசாயிகள் அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.